×

கடலாடி அருகே அரசு பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மாணவர்கள்: குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுப்பு

சாயல்குடி: கடலாடி அருகே இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர்தப்பினர். மூன்று ஆண்டுகளாக புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர் புகார் கூறுகின்றனர். கடலாடி ஊராட்சி ஒன்றியம், இளஞ்செம்பூர்-பூக்குளம் சாலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளும் ஒருங்கே ஒரே வளாகத்திற்குள் அமைந்துள்ளது. இதில் இளஞ்செம்பூர், பூக்குளம், கோகுல்நகர், காலனி, வீரம்பல், அஞ்சத்தம்பல், கிருஷ்ணாநகர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். தொடக்கப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்களும், அரசு உயர்நிலைப்பள்ளியில் 110க்கும் மேற்பட்ட மாணவர்களும் படித்து வருகின்றனர்.

கடந்த 2007ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது, ஆனால் 13 வருடங்களாக உயர்நிலை பள்ளிக்கென ஒரு கட்டிடம் கூட கட்டப்படவில்லை. இதனால் தொடக்கப்பள்ளிக்குச் சொந்தமான கட்டிடம், அங்கன்வாடி மையம், பஞ்சாயத்து சேவைமையக்கட்டிடம், மகளிர் சங்க கட்டிடம் போன்றவற்றில் இரு பள்ளி மாணவர்களும் பாடம் படித்து வருகின்றனர். இடம் நெருக்கடியால் வெயில் அடித்தாலும், மழை பெய்தாலும் மரத்தடியிலும், வளாகத்திலும் படிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் நேற்று பள்ளி மரத்தடியில் மாணவர்கள் படித்து கொண்டிருக்கும்போது தொடக்கப்பள்ளியின் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்ததாக கூறுகின்றனர்.
இதுகுறித்து பெற்றோர் கூறும்போது, ‘கடந்த 7 வருடங்களாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இப்பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர். ஆனால் பள்ளியில் தேவையான அடிப்படை வசதியில்லாததால் கடும் அவதிகுள்ளாகி வருகின்றனர்.

இங்குள்ள தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டிடம் கடந்த 1990ல் கட்டப்பட்டது. கட்டிடம் மிக பழமையாகி, சிதிலமடைந்து கட்டிடத்தின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பாடவேளையில் சுவரின் சேதமடைந்த ஒருபகுதி திடீரென இடிந்து விழுந்தது. பள்ளி நாட்களில் வகுப்பறை கட்டிடத்திற்குள் பாடங்களை படிக்க போதிய இடம் இல்லாததால், வெளியிலுள்ள ஊராட்சிக்குச் சொந்தமான கிராம சமுதாயகூடம், அங்கன்வாடி கட்டிடம், சமையலறை, மகளிர் மன்ற கட்டிடம் மற்றும் மரத்தடி நிழலில் பாடங்களை படித்து வருகின்றனர். திறந்த வெளியில் வகுப்புகள் நடப்பதால், குப்பைகள் காற்றில் பறந்து வருவதாலும், கால்நடைகள் வந்து செல்வதாலும், படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் பள்ளியில் குடிநீர் தொட்டி சேதடைந்து கிடக்கிறது. கழிவறைகள் சேதமடைந்து கிடப்பதாலும், கூடுதல் கழிவறை வசதிகள் இல்லாததாலும் மாணவர்கள் மட்டும் திறந்தவெளியை பயன்படுத்தும் சூழல் உள்ளது. இதனால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இப்பள்ளியின் சேதமடைந்த கட்டிடங்களின் நிலைமை மற்றும் உயர்நிலைப்பள்ளிக்கென கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கடலாடி யூனியன் அலுவலகம், வட்டார உதவி தொடக்க கல்வி அலுவலகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றில் மூன்று ஆண்டாக பல முறை மனு கொடுத்து விட்டோம், ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. கண்டுகொள்ளவில்லை. இதனால் மாணவர்கள் பள்ளி வேளை நாட்களில் உயிருக்கு உத்திரவாதம் இன்றி படித்து வருகின்றனர். எனவே திங்கள் கிழமைக்குள் அதிகாரிகள் வந்து கட்டிடத்தை மராமத்து மற்றும் புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட ஆய்வு செய்யவில்லை என்றால் திங்கள் முதல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை என முடிவு செய்துள்ளதாக கூறினர்.

Tags : parents ,collapse ,government school ,school ,sea ,children , School, Complaint, Parents, Parents, Students, Flowers
× RELATED மாணவர்கள் வகுப்புகளை ‘கட்’ அடித்தால்...