ஈரோடு: ஈரோடு ரயில் நிலையத்தில் இலவச வைபை வசதியுடன் கூடிய நவீன பைக் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளதோடு வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு சலுகை திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு ரயில் நிலையத்திற்கு தினமும் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. ரயிலில் பயணிக்கும் பயணிகள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ரயில் நிலையத்தில் பாதுகாப்பாக நிறுத்தி செல்வதற்கு போதுமான வசதிகள் இல்லாமல் இருந்து வந்தது. பெயரளவில் மட்டுமே பைக் ஸ்டாண்ட் செயல்பட்டு வந்தது. இங்கு மேற்கூரை எதுவும் இல்லாமல் வெயில், மழையில் வாகனங்கள் காயும் நிலை இருந்து வந்தது. பெட்ரோல் திருட்டு, உதிரிப்பாகங்கள் திருட்டு என ஏராளமான புகார்கள் இருந்து வந்தது.
எல்லாவற்றிக்கும் மேலாக ரயில்வே நிர்வாகம் நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பாக, தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றதையடுத்து ரயில்வே நிர்வாகம் பைக் ஸ்டாண்ட் குத்தகை உரிமத்தை ரத்து செய்து புதிதாக ஏலம் விட்டது. இதையடுத்து, பைக் ஸ்டாண்டில் பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்துள்ளது. குறிப்பாக, வாகன திருட்டு, பெட்ரோல் திருட்டு உள்ளிட்டவைகளை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஹெல்மெட்டுகளை பாதுகாக்க தனி அறை, வாடிக்கையாளர்களின் வசதிக்காக இலவச வைபை, வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் செய்து கொடுக்கும் வசதி, ஸ்டாண்டில் நிறுத்தப்படும் வாகனங்கள் சர்வீஸ்க்கு விடும்போது கட்டணத்தில் 30 சதவீதம் தள்ளுபடி, புதிதாக வாகனம் எடுத்தால் ரூ.2 ஆயிரம் தள்ளுபடி என ஏராளமான சலுகைகளையும் ரயில்வே நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் இளங்கவி கூறியதாவது: ஈரோடு ரயில்நிலையத்தில் உள்ள பைக் ஸ்டாண்ட் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள், வைபை, ஹெல்மெட் வைக்க தனி அறை, வாகன கட்டணத்திற்கு கம்ப்யூட்டர் பில், மாத பாஸ் வைத்துள்ளவர்களுக்கு தனி கட்டணம், ஸ்டாண்டில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் கட்டணத்தில் சலுகை, வாகனங்கள் சர்வீஸ்க்கு விட்டால் லேபர் கட்டணத்தில் 30 சதவீதம் சலுகை, புதிய வாகனம் எடுத்தால் ரூ.2 ஆயிரம் வரை சலுகை என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இருந்த அனைத்து புகார்களுக்கும் தற்போது ரயில்வே நிர்வாகம் தீர்வு கண்டுள்ளது. விரைவில் ஈரோட்டில் உள்ள ஜவுளி கடைகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டு ஜவுளி எடுத்தால் சலுகை வழங்கும் ஒரு திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக முன்மாதிரி திட்டமாக ஈரோடு ரயில் நிலையத்தில் உள்ள பைக் ஸ்டாண்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இளங்கவி கூறினார்.