×

பிட் இந்தியா திட்டத்தின் கீழ் யோகா, உடற்பயிற்சி விவரங்களை கல்லூரி, பல்கலைக்கழகங்கள் அனுப்ப உத்தரவு: யுஜிசி சுற்றறிக்கை

வேலூர்:   பிட் இந்தியா திட்டத்தின் கீழ் யோகா, உடற்பயிற்சி குறித்த விவரங்களை கல்லூரி, பல்கலைக்கழகங்கள் அறிக்கை அனுப்பி வைக்க யுஜிசி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. நாட்டு மக்களின் உடல் நலனை மேம்படுத்தி வலுவான இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில் ‘பிட் இந்தியா இயக்கம்’ என்ற திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து, பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் இத்திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள், யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உயர் கல்வி நிறுவனங்களில் இத்திட்டத்தை தொடர் நிகழ்வாக செயல்படுத்தும் வகையில் புதிய வழிகாட்டுதலை யுஜிசி கடந்த டிசம்பரில் வெளியிட்டது. அதன்படி, ஜனவரி முதல் உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் கட்டாய உடற்பயிற்சிக்கு 45 நிமிடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில், பாட வகுப்பு நேரங்களை மாற்றியமைக்க வேண்டும். இந்த உடற்பயிற்சி நேரத்தில் ஓட்டப் பந்தயம் சார்ந்த விளையாட்டுகள், உள்அரங்கு அல்லது வெளிஅரங்கு விளையாட்டுகள், யோகா, சைக்கிள் பயிற்சி, நீச்சல் என ஏதாவது ஒரு விளையாட்டை கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யலாம்.

ஒவ்வொரு உயர் கல்வி நிறுவனமும் உடற்பயிற்சி கிளப் ஒன்றை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு 0 முதல் 5 மதிப்பெண் வரையிலான நட்சத்திர குறியீடு (ஸ்டார் கிரேட்) வழங்கப்படும். அதன் அடிப்படையில் தேசிய உயர் கல்வி நிறுவனங்கள் தரவரிசை நடைமுறையில் அதிகபட்சமாக 5 சதவீத மதிப்பெண் வழங்கப்படும் என யுஜிசி அறிவித்தது. இந்த வழிகாட்டுதலின் அடிப்படையில் உயர்கல்வி நிறுவனங்கள் ஜனவரி மாதம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை உரிய வீடியோ, புகைப்பட ஆதாரங்களுடன் 7ம் தேதிக்குள் யுஜிசியின் கல்வி நிறுவனங்கள் கண்காணிப்பு வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.


Tags : Universities ,Colleges , Bit India, Yoga, Exercise, UGC, Circular
× RELATED கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான...