×

தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் ஜிபிஎஸ் கருவி, சிசிடிவி கேமரா பொருத்தாத பள்ளி வாகனங்களுக்கு தடை: வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்

திருவண்ணாமலை:  பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி, அனைத்து பள்ளி வாகனங்களிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்த ஆண்டு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ், சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கடந்த ஆண்டே உத்தரவிட்டது. இது நடைமுறைக்கு வந்த நிலையில், குறைந்த அளவிலான பள்ளி வாகனங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளி வாகனங்களிலும் கட்டாயம் ஜிபிஎஸ், சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். இதை நடைமுறைப்படுத்தாத பள்ளி வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அனைத்து மாவட்டங்களிலும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்களுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்து நடைமுறைபடுத்தக்கோரி தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட வட்டார போக்குவரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி அனைத்து பள்ளி வாகனங்களிலும் சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், முழுமையாக செயல்படுத்தப்படாமல் உள்ளது. இதனால், வரும் கல்வி ஆண்டு முதல் கட்டாயமாக அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ், சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு பொருத்தாத வாகனங்களை இயக்க தடைவிதிக்கப்பட உள்ளது.

வரும் கல்வி ஆண்டில் அனைத்து பள்ளி வாகனங்களின் வாகன தணிக்கை நடைபெறும்போது, ஜிபிஎஸ் கருவி, கண்காணிப்பு கேமரா ஆகியன வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்தால் மட்டுமே அதனை இயக்குவதற்கு அனுமதி சான்று வழங்கப்படும். இவ்வாறு பொருத்தப்படும் கருவிகளை கண்காணிக்க முதல் கட்டமாக அந்தந்த பள்ளிகளில் கட்டுப்பாட்டு அறைகள் வைக்கப்படும். அதன் பின்னர், காவல் துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Tamil Nadu ,CCTV , Surveillance Camera, Chennai, Court, Tamil Nadu Govt
× RELATED ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான...