×

முருகன் கோவில்களில் தைப்பூசத் திருவிழா : அரோகரா முழக்கத்துடன் காவடி ஏந்தியும், அலகு குத்தியும் நேர்த்திக் கடன் செலுத்தி பக்தர்கள் வழிபாடு

பழனி: தைப்பூசத் திருநாள் இன்று உலகம் முழுவதும் வெகு விமர்சையாகக்  கொண்டாடப்படுகிறது.
தைப்பூசத் திருவிழாவையொட்டி முருகன் பெருமானின் அறுபடை வீடுகள் உள்ளிட்ட கோவில்களில் லட்சக்கணக்காண பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அரோகரா முழக்கத்துடன் பக்தர்கள் நேர்த்திக்கடன்

தமிழ் கடவுள் முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் தைப்பூசம் கருதப்படுகிறது. அதையொட்டி பக்தர்கள் காலையிலேயே கோவிலுக்கு சென்று காவடி எடுத்து வேல் பூஜை செய்து தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார்கள். பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் காவடிகளை ஏந்தியும், அலகு குத்தியும் நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.

7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம்

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டும் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் அவர் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச தினத்தில் ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படும். அதன்படி இன்று காலை 6 மணிக்கு முதல்கால ஜோதி தரிசனம் துவங்கியது.ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. அப்போது அதிகாலையிலேயே காத்திருந்த பக்தர்கள், ‘அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை’ என்ற மகா மந்திரததை முழங்கி ஜோதி தரிசனம் செய்தனர்.

அறுபடை வீடுகளில் களைகட்டும் திருவிழா

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில், தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர். முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்று இரவும், நாளை மாலை தைப்பூச தேரோட்டமும் நடைபெறுகிறது.அதனை தொடர்ந்து திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைபூசத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தைப்பூசத்தையொட்டி, நெல்லை, குமரி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிருந்து காவடி எடுத்து, வேல்குத்தி பாதயாத்திரையாக வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

வெளிநாடுகளிலும் தைப்பூசத் திருவிழா

மேலும் வெளிநாடுகளிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மலேசியாவில் பத்துமலை முருகன் கோவிலில் லட்சக்கணக்கான மக்கள் இன்று தரிசனம் செய்து வருகின்றனர். பினாங்கு, ஈப்போ ஆகிய இடங்களிலும், சிங்கப்பூர், மொரிஷியஸ், இலங்கை ஆகிய நாடுகளிலும் தைப்பூசம் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.தை மாதத்தில் வரும் பவுர்ணமியும், பூச நட்சத்திரமும் கூடிய நாளை தைப்பூசத் திருநாளாக தமிழர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த நாளில் பக்தர்கள் விரதமிருந்து முருகனை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : festival ,Murugan ,temples ,Devotees ,Thaipoosath , Thaipusam, Thirunal, Pilgrims, Arora, Muruga Peruman
× RELATED பழனி முருகன் கோயில் நடைபெற இருந்த...