×

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ வெற்றி செல்லும்: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை:  கடந்த 2016ல் நடந்த தமிழக சட்டப் பேரவை பொதுத்தேர்தலில்  காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான திருமாவளவன், அதிமுக வேட்பாளராக முருகுமாறன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 87 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முருகுமாறன் வெற்றி பெற்றார். இதையடுத்து முருகுமாறன் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக்கோரி திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.  வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன், தபால் வாக்குகளின் போது நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளுடன் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.  அதன்படி இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது தேர்தல் அதிகாரியான விஜயராகவன் நேரில் ஆஜராகி 102 தபால் வாக்குகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அப்போது அதில் 10 வாக்குச்சீட்டுகள் முறையானவை அல்ல என்றும், எஞ்சியவை செல்லாதவை என்பதால் நிராகரிக்கப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.  இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில், காட்டுமன்னார்கோவில் அதிமுக  எம்எல்ஏ முருகுமாறன் வெற்றி பெற்றது செல்லும். தேர்தலை செல்லாது என்று அறிவிக்கக்கோரி திருமாவளவன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது.

Tags : MLA ,victory ,AIADMK ,constituency ,Katumannarkoil , AIADMK MLA, Katumannarkoil ,constituency
× RELATED அதிமுக முன்னாள் எம்எல்ஏ மரணம்