×

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு வன்முறையை தூண்டும்படி பேச்சுரிமை இருக்கக்கூடாது: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: பிரதமர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், பேச்சுரிமை வன்முறையை தூண்டும் வகையில் இருக்கக்கூடாது என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. குமரி மாவட்டம், திருவிதாங்கோட்டை சேர்ந்த அன்வர் உசேன்,  ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து கடந்த டிச.28ம் தேதி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் குறித்து நான் அவதூறாக பேசியதாக, தக்கலை போலீசார் ஜன.24ல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கூட்டம் நடந்து பல நாட்களுக்கு பிறகு வேண்டுமென்றே, அரசியல் காரணங்களுக்காக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனது முன்ஜாமீன் மனு நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் தள்ளுபடியானது. இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் தரவேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இம்மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஆஜராகி, விளக்கமளிக்க வேண்டுமென நீதிபதி கூறியிருந்தார். இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஆஜராகி, ‘‘என் மகளின் திருமணம் நடைபெற உள்ளது. இனிமேல் இது போல் பேசமாட்டேன் என உத்தரவாதம் அளிக்கிறேன்’’ என்றார். அப்போது நீதிபதி, ‘‘உங்களின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது. இதற்காகவே உங்களை தண்டிக்கலாம். அரசியலமைப்பு சட்டத்தின்படி ஜனநாயக நாட்டில் பேச்சுரிமை உள்ளது. இதன்மூலம் எதையும் விமர்சிக்கலாம். அரசியல்ரீதியாக பேசுவதில் தவறில்லை. நீதிமன்ற தீர்ப்புகளைக் கூட விமர்சிக்கலாம். அயோத்தி வழக்கின் தீர்ப்பு சரியானதல்ல என்று கூட விமர்சிக்கலாம். ஏனெனில் விமர்சிக்கும் உரிமை உண்டு. ஆனால், எதற்கும் ஒரு எல்லை உண்டு. சமூக நல்லிணக்கம் பாதிக்கும் வகையில் பேசக்கூடாது. வன்முறையை தூண்டும் வகையில் பேசக் கூடாது. உங்கள் மகளின் திருமணம் நடக்கவிருப்பதாக கூறுகிறீர்கள். இதை கருத்தில் கொண்டு உங்களுக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது’’ என உத்தரவிட்டுள்ளார்.

Tags : Modi ,Icort Branch , Prosecution,Prime Minister Modi,Icort Branch, Opinion
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...