×

அதிமுக முன்னாள் எம்.பி.க்கு பிப். 21 வரை காவல் நீட்டிப்பு: நீதிமன்றம் உத்தரவு

சூலூர்:  அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமிக்கு பிப்.21ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து சூலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவை மாவட்டம் முத்துக்கவுண்டன்புதூரைச் சேர்ந்த கந்தவேல் என்பவர் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி அ.தி.மு.க. பெயரில் போலி  இணையதளம் உருவாக்கி அதன்மூலம் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக புகார் அளித்தார். புகாரின்பேரில் கடந்த மாதம் 25ம் தேதி கே.சி. பழனிச்சாமி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ேக.சி. பழனிச்சாமியை பிப்.7ம் தேதி வரை    நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி கே.சி. பழனிச்சாமி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து சூலூர் நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமியை போலீசார் ஆஜர்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. இந்தநிலையில் நேற்று மாலை  சூலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வேடியப்பன், வீடியோ கான்பரன்சிங் மூலம் கே.சி. பழனிச்சாமியின்  நீதிமன்ற காவலை பிப்ரவரி 21ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

Tags : Pip , Former MP ,AIADMK, custody, 21, Court order
× RELATED வாசுதேவநல்லூர் அருகே கார் மோதி தொழிலாளி பலி