×

போராட்டத்தால் பணியிட மாற்றம் அரசு மருத்துவர்கள் சங்க மாநில நிர்வாகி மரணம்: நெருக்கடியால் ஏற்பட்ட மன உளைச்சல் என குற்றச்சாட்டு

சேலம்: சேலத்தை  சேர்ந்த அரசு மருத்துவர்கள் சங்க மாநில நிர்வாகியான டாக்டர் லட்சுமி  நரசிம்மன் திடீரென மரணம் அடைந்தார். பணியிட மாற்ற நெருக்கடியால் ஏற்பட்ட  மனஉளைச்சலில் அவர் இறந்ததாக கூறப்படுகிறது. சேலம் மாவட்டம்  மேட்டூர் ராமன்நகரை சேர்ந்தவர் டாக்டர் லட்சுமிநரசிம்மன் (50). தமிழ்நாடு  அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில தலைவராக பொறுப்பு வகித்தார்.  சேலம் அரசு  மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை துறை பேராசிரியராக பணியாற்றி வந்தார்.  பின்னர் பதவி உயர்வுடன் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.  இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, தமிழகத்தில்  மருத்துவர்கள்  15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதை மாநிலம்  முழுவதும் ஒரு வாரம் ஒருங்கிணைத்து நடத்தியவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன். இதன் எதிரொலியாக தர்மபுரியில் இருந்து ராமநாதபுரத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருடன் போராட்டத்தில்  ஈடுபட்ட 120 மருத்துவர்கள், தொலை தூரங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கிடையில் ராமநாதபுரத்திற்கு பணிக்கு சென்ற லட்சுமிநரசிம்மன், அங்கிருந்து தர்மபுரிக்கு பணியிட மாற்றம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் நேற்று காலை, வீட்டிலிருந்த டாக்டர் லட்சுமி நரசிம்மன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பணியிட மாற்றம் செய்து, அவரை அலைக்கழித்ததே உயிரிழப்புக்கு காரணம் என்று உறவினர்கள், டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து, மனைவி அனுராதா கூறுகையில், ‘‘தமிழகம் முழுவதும் உள்ள  அரசு மருத்துவர்களை ஒன்றிணைத்து கூட்டமைப்பு உருவாக்கி தமிழக அரசுக்கு  எதிராகவும் குரல் கொடுத்தார். இதனால்  சுகாதாரத்  துறை வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்தது. இதனால் ஏற்பட்ட மனஉளைச்சல், அவரது உயிரை பறித்து விட்டது.மன  உளைச்சலுக்கு ஆளாகி இதுவரை 11 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். என் கணவரின் இறப்பே கடைசி இறப்பாக இருக்க வேண்டும்.  மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை அரசு  நிறைவேற்றித்தரவேண்டும்,’’ என்றார்.மருத்துவர்கள் கூறுகையில்,  ‘‘கடந்த பல ஆண்டுகளாகவே,   மருத்துவர்களுக்கான பல்வேறு போராட்டங்களை  முன்னின்று நடத்தியவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன். அதிலும் சமீபத்தில்  நடந்த 15 அம்ச கோரிக்கை போராட்டத்தில் அவர், காட்டிய வேகம் அதிகாரிகள்  மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. இதன் காரணமாக அவரை ராமநாதபுரத்திற்கு  பணியிட மாற்றம் செய்துள்ளனர். இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலே, மாரடைப்பாக மாறி,  அவரது மரணத்திற்கு வழிவகுத்துள்ளது’’ என்றனர்.
டாக்டர் லட்சுமி நரசிம்மனுக்கு அனுராதா என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.

Tags : Workplace Transition By Struggle Government Doctors Association , Workplace, Doctors Association, depression caused ,crisis
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...