×

செருப்பை கழற்ற வைத்த விவகாரம் பழங்குடியின சிறுவன், குடும்பத்தினரிடம் நேரில் வருத்தம் தெரிவித்த அமைச்சர்

ஊட்டி: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட  தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நேற்று முன்தினம்  துவங்கியது. இதனை துவக்கி வைக்க வந்த அமைச்சர் திண்டுக்கல்  சீனிவாசன், அங்கிருந்த பழங்குடியின சிறுவர்களை அழைத்து தனது செருப்பை  கழற்றி விடுமாறு தெரிவித்தார். தயங்கியபடியே வந்த ஒரு சிறுவன், திண்டுக்கல்  சீனிவாசன் அணிந்திருந்த செருப்பை கழற்றி எடுத்து சென்று ஓரமாக  வைத்தார். இந்த சம்பவம் தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள் மற்றும் சமூக  வலைத்தளங்களில் வெளியாகி அமைச்சருக்கு  கடும் எதிர்ப்பு கிளம்பின. பல்வேறு பழங்குடியின அமைப்புகளும் கண்டனம் தெரிவித்ததுடன் அமைச்சர் சீனிவாசன் மீது வன்கொடுமை தடுப்பு  சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். மேலும், பழங்குடியின மக்கள் சிலர் மசினகுடி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் ரசீது வழங்க வில்லை. இந்தநிலையில் ஊட்டி தமிழகம் விருந்தினர் மாளிகையில் அமைச்சர்  திண்டுக்கல் சீனிவாசன் தங்கியிருந்தார். அங்கு சம்பந்தப்பட்ட  சிறுவன் மற்றும் அவனது குடும்பத்தினர், பழங்குடியின நிர்வாகிகளை வரவழைத்து பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் சீனிவாசன் கூறியதாவது:- பழங்குடியின மக்கள் தங்களிடம்  நேரடியாக தெரிவிக்க வேண்டும் என கூறியதையடுத்து இன்று (நேற்று)  அனைவரும் என்னை சந்தித்தனர். அவர்களிடம், தெப்பக்காட்டில் நடந்த  நிகழ்வில் எவ்வித உள்நோக்கமும் கிடையாது, என்னுடைய பேரனாக நினைத்துதான்  சொன்னேன் என எனது வருத்தத்தை தெரிவித்தேன். அந்த பழங்குடியின மக்கள் அளித்த  மனுக்களை பெற்று கலெக்டரிடம் வழங்கியுள்ளேன்.

இவ்வாறு அமைச்சர் கூறினார். பின்னர் அவர் காரில் ஏறி அங்கிருந்து  கிளம்பி சென்றார். விசாரணைக்கு பின் நடவடிக்கை: திருப்பத்தூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த விளாப்பாக்கத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்  டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டம் முதுமலையில்   அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்  பட்டியலின சிறுவனை செருப்பை கழற்ற சொன்ன விவகாரத்தில் நடைபெற்ற  சம்பவத்தின் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகள் கேட்டு பெறப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் ஆணைய கமிட்டி முடிவு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

‘ஊருக்கு நல்லது செய்றோம்ன்னு சொன்னாங்க கேஸை வாபஸ் வாங்கினோம்...’
சிறுவனின் தாய் கூறுகையில், ‘அமைச்சர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தோம். அமைச்சர் சந்தித்து பேசியதைத்தொடர்ந்து பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.  எங்கள் கிராமத்திற்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும் என உறுதி  அளித்தனர். அதனால் அவர் மீது அளித்த புகாரை திரும்ப பெற உள்ளோம்’ என்றார்.

Tags : minister ,family minister , wearing sandals, Aboriginal boy, family,regret
× RELATED ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட...