×

77 கோடி சிக்கிய நிலையில் அன்புசெழியன் மீது அமலாக்கத்துறை வழக்கு?: வருமான வரி சோதனையில் நடிகர் விஜய் வீட்டில் எந்த ஆவணங்களும் சிக்கவில்லை

சென்னை: இரண்டு நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனையில் நடிகர் விஜய் வீட்டில் இருந்து எந்த ஆவணங்களும் சிக்கவில்லை. அதேநேரம் ரூ.77 கோடி சிக்கிய சினிமா பைனாஸ்சியர் அன்புசெழியன் மீது அமலாக்க துறையும் வழக்கு பதிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அன்புசெழியன் வீட்டில் சிக்கிய பணம் அனைத்தும் மூத்த அமைச்சர்கள் 2 பேருக்கு சொந்தமானது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் நடித்து, கடந்த ஆண்டு வெளியான `பிகில்’ திரைப்படம் தமிழகம் மட்டுமல்லாது திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் வெற்றிகரமாக ஓடி அதிகளவில் பணம் வசூலானது. ஆனால் இந்த படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம், நடிகர் விஜய், விநியோகஸ்தர் சுந்தர் மற்றும் சினிமா பைனாஸ்சியரும் அதிமுக பிரமுகருமான அன்புசெழியன் தரப்பினர் வருமான வரித்துறைக்கு சரியான கணக்கு காட்டவில்லை என்று புகார் வந்தது. இதையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5ம் தேதி (புதன்) காலை முதல் அதிரடி சோதனை நடத்தினர்.நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்றது. வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த புதன்கிழமை நெய்வேலிக்கு நேரடியாக சென்று விஜயிடம் விசாரணை நடத்தியதோடு, மேலும் விசாரணை நடத்த அவரை சென்னைக்கு அழைத்து வந்தனர். இந்த விசாரணை நேற்று முன்தினம் மாலை வரை தொடர்ச்சியாக சுமார் 30 மணி நேரம் நடைபெற்றது. அதேபோன்று, பைனாஸ்சியரும் விநியோகஸ்தருமான அன்புசெழியன் வீட்டில் கடந்த மூன்று நாட்களாக சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் ரூ.77 ேகாடி ரொக்கப்பணம், 2 பைகள் நிறைய தங்க, வைர நகைகள் மற்றும் ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துக்கள், வெளிநாட்டில் முதலீடு செய்ததற்கான ஆவணங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருமான வரித்துறை சார்பில், கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் சோதனை குறித்து வருமான வரி துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:நடிகர் விஜய் நடித்த `பிகில்’ படம் கடந்தஆண்டு வெளியானது. இந்த படம் வசூல் அளவில் சாதனை படைத்துள்ளது. இந்த படத்தை ஸ்கிரீன் அன்ட் கிரீன் என்ற விநியோக நிறுவனம் சார்பில் சுந்தர் விநியோகம் செய்துள்ளார். இதற்காக  ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு நேரடியாக பணமாகவே சுந்தர் கொடுத்துள்ளார். இதுபோன்று பெரிய அளவில் பணம் கைமாறியுள்ள தகவல் வருமான வரி துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து வருமான வரித்துறையினர் கடந்த சில மாதங்களாக ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர்.அப்போதுதான், இதில் சுந்தர் தவிர, சினிமா பைனான்சியரும் விநியோகஸ்தருமான அன்புசெழியனும் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்தது. இவர்களிடையே பெரிய அளவில் கருப்பு பணம் கைமாறியதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், நடிகர் விஜய் பிகில் படத்தின் வெளிநாட்டு உரிமம் மற்றும் தமிழகத்தில் சில இடங்களின் உரிமமும் வாங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் பிகில் திரைப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தியும், தனது டிவிட்டர் பக்கத்தில், பிகில் திரைப்படம் இந்திய அளவில் வசூல் வேட்டையில் முதல் 10 இடங்களை பிடித்துள்ளது என்று கூறி இருந்தார்.
இதையடுத்து ஏஜிஎஸ் நிறுவனம், நடிகர் விஜய், அன்புசெழியன், சுந்தர் ஆகிய 4 பேரை குறி வைத்து வருமான வரி சோதனை கடந்த புதன்கிழமை முதல் நேற்று வரை நடைபெற்றது. இந்த சோதனையில், நடிகர் விஜய் இந்த படத்திற்காக ₹50 கோடி செக்காக வாங்கியுள்ளார். இது சம்பந்தமாக வருமான வரித்துறைக்கும் கணக்கு தாக்கல் செய்துள்ளார். விஜயிடம் நடந்த இரண்டு நாள் விசாரணையில், வருமானத்துக்கு அதிகமாக பணம் கைமாறியுள்ளதாக எந்த ஆவணமும் விஜயிடம் இருந்து சிக்கவில்லை. அவரது வீட்டில் சல்லடை போட்டு தேடி பார்த்துவிட்டோம். அதேநேரம் நடிகர் விஜய் வீட்டில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சோதனை நடைபெற்றது. அப்போது அவரிடம் இருந்த நகை மற்றும் சொத்துக்கள்தான் தற்போதும் உள்ளது. இந்த 4 ஆண்டுகளாக வந்த வருமானத்தை எங்கு முதலீடு செய்துள்ளார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அதை தெரிந்துகொள்ளதான் 2 நாள் அவரிடம் விசாரணை நடைபெற்றது. மற்றபடி அவரிடம் இருந்து எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதேபோன்று ஏஜிஎஸ் நிறுவனத்திடமும் எந்த ஆவணங்களும், பணமும் சிக்கவில்லை. அவர்கள் முறையாக வருமான வரி தாக்கல் செய்துள்ளதற்கான ஆவணங்கள் உள்ளது. பட விநியோகஸ்தர் சுந்தரிடமும் பெரிய அளவில் பணம் சிக்கவில்லை. அதேநேரம் சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் மட்டுமே ₹77 கோடி ரொக்கப்பணம், ₹300 கோடிக்கான சொத்து ஆவணங்கள் சிக்கியுள்ளது. 2 பைகள் நிறைய தங்க, வைர நகைகளும் கைப்பற்றப்பட்டது. அதை மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அன்புசெழியன் வீட்டில் 3வது நாளாக நேற்றும் சோதனை நடைபெற்றது. அவரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளோம். ஆனால் அவர் நேரில் வருமான வரி துறையினர் முன் இன்னும் ஆஜராகவில்லை. தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளார்.அன்புசெழியனிடம் கடந்த 2016ம் ஆண்டு முதல் இதுவரை 3 முறை வருமான வரித்துறை சோதனை நடந்துள்ளது. இப்போதுதான் அதிகளவில் பணம் சிக்கியுள்ளது. ஆனால் ஒருமுறை கூட அவர் நேரில் ஆஜராகவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.சினிமா பைனான்சியர் அன்புசெழியன் பற்றி தமிழ் திரைப்பட துறையை சேர்ந்த சிலர் கூறியதாவது:அன்புசெழியன் கடந்த 15 ஆண்டுகளாக சினிமா துறையில் இருக்கிறார். முதலில் விநியோகஸ்தர் துறையில்தான் இருந்தார். அவரிடம் அதிகளவில் பணம் நடமாட்டம் இருந்தது. பின்னர் தயாரிப்பாளர்களுக்கு படம் எடுக்க வட்டிக்கு பணம் கொடுத்தார். அதையடுத்து நடிகர், நடிகைகளையும் தனது கட்டுப்பாட்டில் வைக்கும் அளவுக்கு சினிமா துறையில் அதிக வளர்ச்சி அடைந்து விட்டார்.

அன்புசெழியனுக்கு, தமிழக அமைச்சர்களிடம் அதிக செல்வாக்கு உள்ளது. தென்மாவட்டத்தை சேர்ந்த மூத்த அமைச்சர்கள் 2 பேரின் பினாமியாக செயல்படுவதுடன், அவர்களின் பணத்தை வைத்துக்கொண்டுதான் அன்புசெழியன் தமிழ் சினிமா துறையில் கொடிகட்டி பறந்து வருகிறார். இவர் மீது ஒவ்வொரு முறை குற்றச்சாட்டுகள் வந்தாலும் அந்த அமைச்சர்கள் தலையிட்டு இவரை கைது செய்ய விடாமல் தடுத்து விடுகிறார்கள். அதனால் போலீஸ் அதிகாரிகள்கூட அன்புசெழியனை நெருங்க முடியாத அளவுக்கு வளர்ந்து விட்டார்.தமிழ் சினிமா துறையில் கொடிகட்டி பறந்த டைரக்டர் மணிரத்னத்தின் சொந்த அண்ணன் ஜி.வெங்கடேஸ்வரன் என்ற ஜிவி தற்கொலைக்கு அன்புசெழியன்தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி, திரும்ப செலுத்த முடியாத நிலையில் தற்கொலைக்கு தூண்டப்பட்டார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோன்று நடிகரும், தயாரிப்பாளருமான சசிகுமாரின் நெருங்கிய நண்பர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இதற்கும் அன்புசெழியன்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்திருந்தார். அப்படி இருந்தும் போலீசார் அன்புசெழியனை கைது செய்ய முடியவில்லை. இதேபோன்று நடிகைகள் ரம்பா, தேவயானி ஆகியோரை மிரட்டியதாகவும் புகார் கூறியும், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கெல்லாம் மூத்த அமைச்சர்கள் 2 பேர்தான் காரணம் என்றனர்.

வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 3 நாள் சோதனையில் அன்புசெழியன் வீட்டில் ரூ.77 கோடி பணம், வைர, தங்க நகைகள், ரூ.300 கோடிக்கான சொத்துக்கள், வெளிநாட்டில் முதலீடு என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதால் அன்புசெழியனிடம் அதிகளவு ஹவாலா பணம் நடமாட்டம் உள்ளது உறுதியாகியுள்ளது. அதனால் அந்நிய செலாவணி மோசடி குற்றச்சாட்டும் அவர் மீது எழுந்துள்ளதால் அமலாக்க துறையும் அன்புசெழியனுக்கு நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதையடுத்து அவர் மீது அமலாக்க துறை எந்த நேரமும் வழக்கு பதிவு செய்யும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்ந்து தலைமறைவு
அன்புசெழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆனாலும், அன்புசெழியன் இதுவரை தலைமறைவாகவே உள்ளார். பலமுறை இவர் மீது சோதனை, வழக்கு என்று வந்தாலும் போலீசில் சிக்காமல் தொடர்ந்து தப்பித்து வருகிறார். இதற்கு தென்மாவட்டத்தை சேர்ந்த மூத்த அமைச்சர்கள் 2 பேர்தான் காரணம் என்று கூறப்படுகிறது. தற்போதும் இந்த அமைச்சர்கள்தான் காப்பாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. காரணம், அன்புசெழியன் சிக்கினால், மூத்த அமைச்சர்களும் சிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனாலேயே அவரை காப்பாற்றி வருகிறார்கள். எப்படி இருந்தாலும், இவ்வளவு பணம், வைர நகைகள் சிக்கியுள்ளதால் இந்த முறை அன்பு செழியன் தப்ப முடியாது என்றே வருமான வரித்துறை அதிகாரிகள் உறுதியாக தெரிவித்தனர்.

Tags : Vijay ,Anupsheliyan ,house , 77 crores ,trouble,, Anupsheliyan, documents , Vijay's house
× RELATED பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் விஜய் விகாஸ் மெட்ரிக் பள்ளி சாதனை