×

உமர், மெகபூபா மீது புதிய வழக்கு ஜனநாயகத்தில் மோசமான செயல்: கட்சிகள் கண்டனம்

புதுடெல்லி: காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 வது சட்டப்பிரிவு, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதனால் ஏற்படும் போராட்டங்களை தடுப்பதற்காக காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு கடந்த 6 மாதங்களாக வீட்டு சிறையில் வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், உமர் அப்துல்லா, மெகமூபா மீது நேற்று முன்தினம் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த கடுமையான பிரிவில் கீழ் இவர்களை 3 மாத காலம் வரை விசாரணையின்றி சிறை வைக் முடியும். இதை எத்தனை முறை வேண்டுமானாலும் நீட்டிக்கலாம். இதே சட்டத்தில் பரூக் அப்துல்லா கடந்த செப்டம்பரில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் விடுத்துள்ள டிவிட்டர் பதிவில், ‘ஜனநாயக நாட்டில் குற்றச்சாட்டு இல்லாமல் கைது செய்வது மிக மோசமான செயல். இதை எதிர்த்து அமைதியான முறையில் போராடுவதை தவிர வேறு என்ன வழி மக்களுக்கு உள்ளது?,’ என கூறியுள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘உமர், மெகபூபா மீது எந்த அடிப்படையில் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது? அவர்கள் ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றுபவர்கள். அவர்களை விடுவிக்க வேண்டும்,’ என கூறியுள்ளார்.

Tags : Umar ,Parties , Umar, Megabuba, New Case, Democracy
× RELATED மன்மோகன்சிங் கண்ணியமானவர் ஆனால் மோடி… உமர்அப்துல்லா விளாசல்