×

சபரிமலை கோயில் நகைகள் கணக்கீடு செய்ய தனி குழு: 4 வாரத்தில் அறிக்கை தர உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சபரிமலை கோயில் நகைகளை கணக்கீடு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தனிக்குழு அமைத்த உச்ச நீதிமன்றம், 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான  வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. கேரள அரசு தரப்பில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால்,”ஐயப்பனுக்கு என மொத்தம் 16 ஆபரணங்கள் உள்ளன. இதனை பந்தள அரச குடும்ப பொறுப்பில் தான் வைக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.  பந்தள அரச குடும்பம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சாய்தீபக், ‘‘நூறு வயதான பந்தள ராஜா தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.அவர் கடிதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  ’’ என கூறினார். அப்போது, குறுக்கிட்ட நீதிபதி ரமணா, ‘‘கடிதம் வழங்கியுள்ள விவகாரத்தில் ராஜாவின் கையெழுத்தில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது’’ என கூறினார்.

இதையடுத்து ரேவதி நல்ராஜவர்மா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணன், “ஐயப்பன் கோயில் ஆபரணங்களை பந்தள அரச குடும்பத்தினர் வீட்டில் கணக்கிட வேண்டும்’’ என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி உத்தரவில், “அரச குடும்பத்தின் பாதுகாப்பில் இருந்தாலும் கடவுளுக்கு சொந்தமானவைதானே, இதில் சபரிமலை கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்களின் நலனுக்காக சட்டம் இயற்றுவதில் மத்திய அரசுக்கு என்ன சிக்கல் இருக்கிறது என்பது எங்களுக்கு புரியவில்லை. கோவில் ஆபரணங்கள் தொடர்பாக கணக்கிட்டு அறிக்கை அளிப்பதற்கு, கேரள உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சி.என்.ராமச்சந்திரன் நாயர் தலைமையில் தனி குழு அமைக்கப்படுகிறது அந்த குழுவானது கோவில் நகைகளின் தரம், மதிப்பு மற்றும் வகைகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து அதன் அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் வைத்து 4 வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு, 4 வாரத்திற்கு வழக்கை ஒத்திவைத்தார்.



Tags : panel ,Sabarimala temple ,Supreme Court ,jewelery , Sabarimala Temple, Jewelery, Supreme Court
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...