×

சென்னை, பெங்களூரூ உள்ளிட்ட இடங்களில் பட்டதாரிகளுக்கு சிபிஐ.யில் பயிற்சி: 21 வரை விண்ணப்பிக்க அழைப்பு

புதுடெல்லி: மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) சார்பில் பட்டதாரி மாணவர்களுக்கு ‘இன்டர்ன்ஷிப்’ எனப்படும் பயிற்சி அளிக்க வரும் 21ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நாட்டில் நடைபெறும் குற்றச்செயல்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து புலனாய்வு செய்யும் பணியில் சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பு இன்டர்ன்ஷிப் எனப்படும் பயிற்சி திட்டத்தை இந்த ஆண்டு முதல் தொடங்கியுள்ளது.  இந்த பயிற்சி திட்டத்தில் சேர பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், பல்கலைக் கழகங்களில் பதிவு செய்துள்ள ஆராய்ச்சி மாணவர்கள், சட்ட மாணவர்கள், சைபர், டேட்டா அனலிசிஸ், குற்றவியல், மேலாண்மை, பொருளாதாரம், வணிகவியல் மற்றும் தடயவியல் துறையை சேர்ந்த மாணவர்கள்  விண்ணப்பிக்கலாம். சென்னை, மும்பை, டெல்லி ஐதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, லக்னோ சண்டிகர் ஆகிய இடங்களில் உள்ள சிபிஐ அலுவலகங்களில் மொத்தம் 30 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிபிஐ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ‘சிபிஐ.யில் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற விரும்புவோர் தங்களது முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை வரும் 21ம் தேதிக்குள் விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும். அந்த விண்ணப்பத்துடன் இன்டர்ன்ஷிப் பணியை தேர்வு செய்தது ஏன்? எந்த பிரிவில் தனக்கு விருப்பம் உள்ளது என்பது தொடர்பாக 300 வார்த்தைகளை எழுதி அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் போலீஸ் கண்காணிப்பாளர் (பயிற்சி) சிபிஐ அகாடமி, ஹபுர் ரோடு, கமலா நேரு நகர், காஜியாபாத், உத்தர பிரதேசம் 201002’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும். குறிப்பிட்ட நகரத்தில் கூடுதலாக விண்ணப்பங்கள் வந்தால் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை நகரங்களில் நேர்காணல் நடத்தி தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வானோர் குறித்த இறுதி பட்டியல் சிபிஐ மற்றும் சிபிஐ அகாடமியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்,’ என கூறப்பட்டுள்ளது.

Tags : Graduates ,Chennai ,Bangalore ,areas ,CBI , Chennai, Bangalore, CBI
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...