×

வீட்டுமனை பிரிவுக்கு அங்கீகாரம் வழங்க 1 லட்சம் லஞ்சம் வாங்கிய நகரமைப்பு ஆய்வாளர் கைது

ஆவடி: ஆவடி அடுத்த சேக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (42). இவருக்கு சொந்தமாக விளிஞ்சியம்பக்கம் பகுதியில் 24 சென்ட் மற்றும் 25 சென்ட் நிலம் உள்ளது. மேற்கண்ட வீட்டு மனைகளுக்கு அங்கீகாரம் பெறுவதற்காக ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த டிசம்பர் மாதம் ரமேஷ் விண்ணப்பம் கொடுத்திருந்தார். இதனையடுத்து, நகரமைப்பு ஆய்வாளர் காமதுரை (51) என்பவர் மேற்கண்ட இடத்தை ஆய்வு செய்துள்ளார். அதன் பிறகு, மனைக்கு அங்கீகாரம் வழங்க பரிந்துரை செய்ய 6லட்சம் லஞ்சப்பணம் கேட்டுள்ளார். அதற்காக, 1லட்சம் பணத்தை முதல் தவணையாக உடனடியாக கொடுக்க வேண்டும் என ரமேசிடம் கூறியுள்ளார். இதையடுத்து, பணத்தை கொடுக்க விருப்பமில்லாத ரமேஷ், ஆலந்தூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு அலுவலகத்துக்கு சென்று புகார் கொடுத்துள்ளார்.

 டி.எஸ்.பி லவக்குமார் அறிவுரையின் பேரில், ரசாயன பவுடர் தடவிய 1லட்சம் லஞ்சப்பணத்தை நகரமைப்பு ஆய்வாளர் காமதுரையிடம் கொடுக்குமாறு ரமேஷிடம் கூறி உள்ளார். நேற்று மதியம் 12.30 மணி அளவில் ரமேஷ், நகரமைப்பு ஆய்வாளர் காமதுரையை தொடர்பு கொண்டு பணம் கொண்டு வந்துள்ளதாக கூறியுள்ளார். அதற்கு, அவர் ஆவடி மாநகராட்சி அலுவலகத்திற்கு பணத்துடன் வரவேண்டாம். நீங்கள் இந்துக்கல்லூரி ரயில் நிலையம் அருகே வாருங்கள் என கூறியுள்ளார். அதன்படி, ரமேஷ் பணத்துடன் அங்கு சென்றார். பின்னர், அங்கு நின்று கொண்டிருந்த காமதுரையிடம் 1 லட்சத்தை ரமேஷ் கொடுத்து உள்ளார்.  அதை, அவர் வாங்கி தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்துள்ளார். இதை மறைந்திருந்து கவனித்த டி.எஸ்.பி லவக்குமார் தலைமையில் போலீசார் அவரை சுற்றி வளைத்து  கைது செய்தனர். மேலும், போலீசார் அவரிடம் இருந்து லஞ்ச பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை மாநகராட்சி அலுவலகம் அழைத்து வந்தனர்.

பின்னர், போலீசார் அவரிடம் லஞ்சப்பணத்தை வாங்க உத்தரவிட்ட அதிகாரிகள் யார் எனவும் விசாரணை நடத்தினர். இதன் பிறகு,  போலீசார் அவரை அழைத்துக்கொண்டு தாம்பரம் அருகே மாடம்பாக்கம் கிராமத்தில் வீட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கும் போலீசார் சோதனை செய்தனர். இதன் பிறகு போலீசார் காமதுரையை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் நேற்று இரவு அடைத்தனர். மாநகராட்சி அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த சம்பவம் ஆவடியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Tags : City inspector ,inspector ,City , Housing division, bribery, city inspector, arrested
× RELATED கள்ளச்சாராயம் விற்ற வாலிபர் கைது