×

செம்பாக்கம் ஏரி மாசடைவது தொடர்பாக கலெக்டர், பல்வேறு துறை அதிகாரிகள் குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: செம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் விடப்படுவதால் ஏரி மாசடைந்து வருவது தொடர்பாக கலெக்டர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.  செம்பாக்கம் ஏரியை ஒட்டியுள்ள  சர்வமங்களா நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: பல்லாவரம், தாம்பரம், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகள் மற்றும் சிட்லப்பாக்கம் கிராம பஞ்சாயத்து ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாத இடங்களில் இருந்து வரும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல், நேரடியாக செம்பாக்கம் ஏரியில் விடப்படுகிறது. இதனால் ஏரி மாசடைந்து வருகிறது.  வெளிநாட்டு பறவைகள், பயணத்துக்கு இடையே தங்கும் இடமாக இந்த ஏரியை பயன்படுத்தி வருகின்றன. தற்போது ஏரி மாசுபட்டுள்ளதால் வெளிநாட்டு பறவைகள் வரத்து குறைந்துவிட்டது.

சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீரும் மாசடைந்துள்ளது. எனவே இந்த ஏரியில் கழிவுநீர் விடுவதை தடுத்து ஏரியை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் கே.ராமகிருஷ்ணன் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கோகுல்கிருஷ்ணன் ஆஜரானார். விசாரணைக்கு பின் அமர்வின் உறுப்பினர்கள் வழங்கிய உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்த ஏரியில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை ஆகியவற்றின் கண்காணிப்பு பொறியாளர் அளவிலான அதிகாரிகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி, சிட்லபாக்கம் பஞ்சாயத்து தனி அலுவலர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.

 இக்குழு ஏரியில் ஏற்பட்டுள்ள மாசு, கழிவுநீர் ஏன் ஏரியில் விடப்படுகிறது, அதை எப்படி தடுப்பது, சம்பந்தப்பட்ட நகராட்சி பகுதிகளில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் தற்போதைய நிலை, ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக ஆய்வு செய்து 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ேமலும் பசுமை தீர்ப்பாயம் அமைத்துள்ள மாநில திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்பு குழுவும் தனியாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனு மீதான அடுத்த விசாரணை மே 4ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.Tags : Collector ,lake ,Sembakkam ,Green Tribunal , Chembakkam Lake, Collector, Committee of Departmental Officers, Green Tribunal
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை...