×

பாதுகாப்பு வளையத்தில் உள்ள திரிசூலம் மலையில் தீவிபத்து

ஆலந்தூர்: மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே திரிசூலம் மலை உள்ளது. இதன் உச்சியில் சிக்னல் நிலையம் உள்ளது. காடுபோல காணப்படும் இந்த மலைப்பகுதி கோஸ்ட் கார்டு கட்டுப்பாட்டில் உள்ளது. மலைப்பகுதியில் வெளியாட்கள் நுழைந்து விடாதபடி  முழுவதும் கம்பி வேலி அமைத்து  பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும், ஆர்பிஎப் போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியும் நடந்து வந்தது. ஆனால் துப்பாக்கி பயிற்சியின்போது ஒருவரின் காலில் குண்டு பாய்ந்ததால்  அது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில்  நேற்று  காலை இந்த மலைப்பகுதியில் உள்ள மரங்கள்  திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கின.  இதனால்  மலைப்பகுதி புகை மண்டலமாக மாறியது. இதுகுறித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த  ஊழியர்கள் மீனம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார், தாம்பரம் தீயணைப்பு படை வீரர்களுடன் அங்கு சென்று  நுரை மற்றும் நீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்து  குறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.  மேலும் வெயில் காரணமாக  சறுகுகளால் தீவிபத்து ஏற்பட்டதா அல்லது ஊழியர்கள் யாராவது சிகரெட் பிடித்து விட்டு தீயை அணைக்காமல் போட்டதால் தீ பற்றியதா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் மீனம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : trident ,mountain , Trisulum Mountain, Fire
× RELATED ஏற்காடு 11-வது கொண்டை ஊசி...