×

தமிழகம் தொடர்ந்து புறக்கணிப்பு ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்காதது அநீதி: பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:திண்டிவனம் - நகரி, திண்டிவனம் - திருவண்ணாமலை, சென்னை - மாமல்லபுரம் - கடலூர், அத்திப்பட்டு - புத்தூர், உள்ளிட்ட 10 திட்டங்கள் தான் கடந்த 12 ஆண்டுகளில் தமிழகத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ள புதிய தொடர்வண்டிப் பாதை  திட்டங்கள்.இதில் ஒன்றுக்குக் கூட பணிகளை மேற்கொள்ளும் அளவுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. மாறாக, இத்திட்டங்கள் செயல்பாட்டில் இருப்பதாக காட்டிக் கொள்வதற்காக அடையாள நிதியாக தலா ரூ.1000 மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு  உள்ளிட்ட தெற்கு தொடர்வண்டித்துறை ஆளுகைக்குள் உள்ள பகுதிகளில் தொடர்வண்டித் திட்டங்களை செயல்படுத்துவதற்காக 2020-21ம் ஆண்டில் நிதியாகவும், கடன் பத்திரங்களாகவும் மொத்தம் ரூ.4,057 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.  ஆனாலும் கூட, ஒரு மாநிலத்தில் செயல்பாட்டில் உள்ள 10 புதிய பாதை திட்டங்களில் ஒன்றுக்குக் கூட நிதி ஒதுக்காதது மிகப்பெரிய அநீதி. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கு விழுப்புரம், திருச்சி வழியாக ஒரு பாதை, கடலூர், தஞ்சாவூர் திருச்சியை இணைக்கும் வகையில் ஒரு கிளைப்பாதை ஆகியவை உள்ளன. இதில் முதல் பாதையில் சென்னையிலிருந்து  மதுரை வரை இரட்டைப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தென்மாவட்டங்களுக்கான தொடர்வண்டிப் போக்குவரத்துத் தேவையை இந்த பாதைகளால் நிறைவேற்ற முடியவில்லை. அதை கருத்தில் கொண்டு தான் சென்னையிலிருந்து  மாமல்லபுரம், புதுச்சேரி வழியாக கடலூருக்கு கிழக்குக் கடற்கரையோர பாதை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. கடலூரில் இருந்து காரைக்குடி வரை ஏற்கனவே பாதை இருக்கும் நிலையில், காரைக்குடி - கன்னியாகுமரி புதிய பாதை  அமைத்தால் தமிழகத்தின் ஒட்டுமொத்த கிழக்குக் கடற்கரையையும் இணைக்க முடியும் என்ற எண்ணத்தில் காரைக்குடி - கன்னியாகுமரி பாதை உருவாக்கப்பட்டது.தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளாக புதிய தொடர்வண்டிப்பாதைகள் எதுவும் அமைக்கப்படவில்லை. தமிழகத்தின் 10 புதிய தொடர்வண்டிப்பாதைகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்.

Tags : Tamil Nadu ,Ramadas ,founder , Tamil Nadu, boycott, railway, Ramadas,
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...