×

எஸ்ஆர்எம் பல்கலையில் துப்பாக்கி, கத்தியுடன் மோதல் சம்பவம் மாணவர்கள் உள்பட 10 பேர் அதிரடி கைது

சென்னை: எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ மாணவர்கள் துப்பாக்கி மற்றும் பட்டாக்கத்தியால் மோதிக் கொண்டது ெதாடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு அடுத்த காட்டாங்கொளத்தூரில் எஸ்ஆர்எம் நிகர்நிலை பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு பொறியியல், மருத்துவம், சட்டம், செவிலியர் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 20  ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். வெளிமாவட்ட, மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் விடுதிகள் மற்றும் அப்பகுதிகளை சுற்றியுள்ள வீடுகளில் வாடகைக்கு தங்கியிருந்து படிக்கின்றனர். இந்நிலையில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் கடந்த 4ம் தேதி மாலை எம்பிஏ 2ம் ஆண்டு படிக்கும் இருதரப்பு மாணவர்களிடையே ஒரு பெண்ணுடன் காதல் விவகாரம் தொடர்பாக அடிதடி மோதல் நடந்தது. அப்போது, ஒருவர் கையில் துப்பாக்கியுடன் மற்ற மாணவர்களை சுடுவதற்காக துரத்திச் சென்றுள்ளார். இதை பார்த்ததும் மாணவ, மாணவிகள் அலறியடித்து ஓடினர். மற்றொரு தரப்பை சேர்ந்த ஒரு மாணவர் பட்டாக்கத்தியால் சரமாரியாக  வெட்டியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிந்ததும் வண்டலூர் போலீஸ் டிஎஸ்பி ரவிச்சந்திரன், மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு அனைத்து நுழைவாயில்களையும் மூடிவிட்டு, மாணவர்களிடம்  கள்ளத்துப்பாக்கி எப்படி வந்தது, என்ன காரணத்தினால் மோதல் ஏற்பட்டது என தீவிரமாக விசாரித்தனர். இதுதொடர்பாக மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவர்களிடம் இருந்து பட்டாக்கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து துப்பாக்கியை காட்டி கலவரத்தில் ஈடுபட்டதாக  மறைமலைநகர் அதிமுக பிரமுகர் மகன் லலித் பிரசாத் (30), ஊரப்பாக்கத்தை சேர்ந்த ராஜி (25), பெருங்களத்தூரை சேர்ந்த மவுலாலி (23) உள்பட 5 மாணவர்களை பிடித்து விசாரித்தனர். பின்னர் ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர்களின் பிரஷர் காரணமாக, துப்பாக்கி வைத்திருந்ததாக  லலித் பிரசாத்தை போலீசார் விசாரித்துவிட்டு, எந்த வழக்கும் போடாமல் இன்ஸ்பெக்டர் செல்வம் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். ‘எந்த அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. இதுதொடர்பாக எந்த ஆயுதமும் கைப்பற்றப்படவில்லை’ என போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், எஸ்ஆர்எம் பல்கலை வளாகத்தில் துப்பாக்கி மற்றும் பட்டாக்கத்தியுடன் நடந்த கலவரப் படங்களை காவல்துறை உயர் அதிகாரிகள் பார்த்தனர். இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தும்படி மறைமலை நகர் போலீசாருக்கு  உத்தரவிட்டனர்.
இதுதொடர்பாக மறைமலைநகரை சேர்ந்த அதிமுக பிரமுகர் திருமாறனின் மகன் லலித்பிரசாத் (30), அதே பகுதியை சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் ரவிக்கிருஷ்ணனின் மகன் விஷ்ணு (30), கல்லூரி மாணவர்கள் ராகேஷ் (22), கார்த்திக்  (22), பிரவீன் (23), ஆதித்யா (23), மவுலாலி (23), மாரி கார்த்திக் (23), பென்றோ (23) ரஞ்சித் (23) ஆகிய 10 பேரை நேற்று முன்தினம் இரவு மறைமலைநகர் போலீசார் கைது செய்தனர்.பிறகு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாணவர்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் மாணவர்களின் எதிர்காலம் படிப்பு கருதி ஜாமீனில் விட வேண்டும் என்று கூறினர். இதனை கேட்ட செங்கல்பட்டு குற்றவியல் நீதிபதி காயத்திரி  நிபந்தனை ஜாமீனில் மாணவர்கள் உள்ளிட்ட 10 பேரையும் விடுவித்தார்.இந்த கலவரத்தில் ஒரிஜினல் துப்பாக்கி பயன்படுத்தியதாகவும், இதில் அதிமுக பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதால் அது போலி துப்பாக்கி என போலீசார் கூறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

துப்பாக்கி எங்கே?
எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பட்டாக்கத்தி மற்றும் துப்பாக்கிகளுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் படங்கள், செல்போன் வாட்ஸ்அப் மூலம் வைரலாக பரவியது. இதுகுறித்து விசாரித்த மறைமலை நகர்  போலீசார் முதலில் இரண்டு பேரை மட்டும் பிடித்தனர். எந்த ஆயுதமும் பறிமுதல் செய்யாமல் அவர்களை விடுவித்தனர். மாணவர்கள் மோதலில் பயன்படுத்தியது நிஜ துப்பாக்கிதான் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்த நிலையில்,  அதிமுகவினர் தலையீட்டால் பெயரளவுக்கு விசாரித்துவிட்டு நிஜ துப்பாக்கியை பறிமுதல் செய்யாமல் போலீசார் விட்டு விட்டனர். இதுபோல் குற்றவாளிகளை தப்ப விடுவதால் கல்லூரிகளில் தொடர்ந்து போராட்டங்கள், மோதல்கள், பயங்கர ஆயுதங்களுடன் மோதல்கள் தொடர் கதையாகிவிட்டது. இதனை தடுக்க கல்லூரி நிர்வாகமும் போலீசாரும் எந்தவித நடவடிக்கையும்  எடுக்கவில்லை. இதனால் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.

எனவே, உரிய விசாரணை நடத்தி நிஜ துப்பாக்கியை பறிமுதல் செய்ய வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். மேலும், கல்லூரியில் தொடர்ந்து 4 மாணவர்கள் அடுத்தடுத்து மர்மமான  முறையில் இறந்துள்ளனர். இதுபற்றி சிபிசிஐடி விசாரணை நடந்து வருகிறது. இதை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


Tags : persons ,knife clash ,SRM University ,Conflict 10 , Conflict , gun ,knife ,t SRM University, Action
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...