×

நாளை பழநியில் தைப்பூச தேரோட்டம்: பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்

பழநி: பழநியில் நாளை தைப்பூச தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு, பாதுகாப்பு பணிகளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் ஈடுபட்டுள்ளனர். தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் இன்று இரவு நடக்கிறது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இத்திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து, பாதயாத்திரையாக பழநி கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

இந்தாண்டு தைப்பூச விழா கடந்த 2ம் தேதி பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சுவாமி தினமும் காலையில் தந்தப் பல்லக்கிலும், இரவில் ஆட்டுக்கிடா, காமதேனு, யானை, தங்கக்குதிரை, தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. சிம்ம லக்கினத்தில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கவுள்ளது. தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு சுவாமி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

நிகழ்ச்சியில் பழநி கோயில் செயல் அலுவலர் ஜெயசந்தரபானு ரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார், சித்தனாதன் சன்ஸ் செந்தில்குமார், கந்தவிலாஸ் செல்வக்குமார், கன்பத் ஹோட்டல்ஸ் ஹரிஹரமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நாளை மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. பழநியில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அலகு குத்தியும், காவடி சுமந்தும், பறவைக்காவடி எடுத்தும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். காவடியாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், தேவராட்டம் போன்றவை காண்போரை பரவசமடையச் செய்தது.  பெண்கள் முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து வந்தும், கும்மியடித்தும் வழிபாடு நடத்தினர்.

நெரிசலை குறைக்க பழநி பஸ் நிலையம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. தற்காலிக பஸ் நிலையம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டு, கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு அமைப்பினர் சார்பில் பாதையாத்திரை பக்தர்களுக்கு உணவுகள், குடிநீர், பிஸ்கட், பழங்கள், பால், டீ, பொறி போன்றவை இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. தேரோட்ட விழாவில் சுமார் 6 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  டி.ஐ.ஜி தலைமையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சீருடை போலீசாருடன், மப்டி போலீசாரும் கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் கண்காணித்து வருகின்றனர்.

Tags : policemen ,Palani , Palani
× RELATED பழனி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு...