×

டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம்: ஜெயக்குமாரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில், சரணடைந்த இடைத்தரகர் ஜெயக்குமாரை 7 நாட்கள் சிபிசிஐடி காவலில் வைத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி சார்பில் கடந்தாண்டு நடந்த குரூப் 4 மற்றும் கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வுகளில் முறைகேடாக பலர் பணம் கொடுத்து வெற்றி பெற்றது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து, டிஎன்பிஎஸ்சி கொடுத்த புகாரின்படி சிபிசிஐடி போலீசார் இரண்டு வழக்குகளையும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக ஜெயகுமார் மற்றும் உதவி ஆய்வாளர் சித்தாண்டியை சிபிசிஐடி அறிவித்தது.

இருவரும் தேர்வு எழுதும் நபர்களிடம் குரூப் 4 தேர்வுக்கு ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலும், குரூப் 2ஏ தேர்வுக்கு ரூ.8 லட்சம் முதல் 15 லட்சம் வரை பணம் வசூலித்து முறைகேடாக பணம் கொடுத்த நபர்களை வெற்றி பெற செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார் சித்தாண்டி மற்றும் ஜெயகுமார் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ஜெயக்குமார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். சரணடைந்த ஜெயக்குமாரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவுப்படி அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் நேற்றே மனுதாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அதற்காக முற்பகல் 11.50 மணியளவில் ஜெயக்குமார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிசிஐடி போலீசார் ஜெயக்குமாரை காவலில் எடுக்க அனுமதி கேட்டனர். அப்போது சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு செல்ல சம்மதமா என ஜெயக்குமாரிடம் நீதிபதி கேட்டார்.

அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், நான் தவறு செய்யவில்லை என்று கூறி, கண்ணீர் விட்டு அழுதார். அதன்பின்னர் சிபிசிஐடி மனு மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயக்குமாரை 7 நாட்கள் சிபிசிஐடி காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, ஜெயக்குமாரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக, இளையான்குடி அருகே சிபிசிஐடி போலீசார் அதிரடியாக சித்தாண்டியை சுற்றி வளைத்து கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : CBIIT ,Jayakumar A ,Jayakumar , INPSC, Intermediary Jayakumar, CBCID, Egmore Court
× RELATED எண்ணி முடிக்கவே 2...