×

வேலூர் மாவட்ட மலைப்பகுதிகளில் தீத்தடுப்பு கோடுகள் விரைவில் அமைக்கப்படும்

வேலூர்: வேலூர் மாவட்ட மலைப்பகுதிகளில் கோடை காலம் தொடங்குவதற்குள் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டங்களை பிரித்தபடி கிழக்கு மலைத்தொடரின் ஒரு பகுதியாக விளங்கும் ஜவ்வாது மலைத்தொடர் செல்கிறது. அவற்றை ஒட்டி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை கொண்டுள்ளது. எறும்புத்தின்னி, கரடி, முள்ளம்பன்றி, லங்கூர் இன குரங்குகள் என அரிய வகை விலங்குகள், அரிய வகை தாவரங்கள் இவ்வனப்பகுதிகளில் உள்ளன.

வனப்பகுதிகளை ஒட்டியும், நகரப்பகுதிகளை ஒட்டியும் அமைந்துள்ள மலைகளில் கோடை காலங்களில் கால்நடைகளை மேய்ப்பவர்கள், மலைகள் மற்றும் அது சார்ந்த வனப்பகுதிகளில் நடமாடுபவர்களால் வைக்கப்படும் தீயால் மலைகள் பற்றி எரிவதும், அதில் அரிய வகை தாவரங்கள், மரங்கள், விலங்குகளும் சிக்கி அழிவதும் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்கிறது. அதோடு கோடையில் மஞ்சம்புற்கள் ஒன்றுடன் ஒன்று உராயும்போதும் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனை தடுக்க வனத்துறை சார்பில் மலைகளில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் மலைகளில் தீ ஏற்பட்டாலும், மேலும் தீ பரவாமல் தடுக்கப்படும்.

அதோடு வனப்பகுதியை சார்ந்துள்ள பகுதிகளை சேர்ந்த மக்களை கொண்டு கண்காணிப்புக்குழுக்களும் ஏற்படுத்தப்பட்டு தீ வைப்பவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டு கோடைகாலம் நெருங்கி வரும் நிலையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் வனப்பகுதிகளை ஒட்டிய மலைகளில் தீத்தடுப்புக் கோடுகள் அமைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘மார்ச் மாதத்துக்குள் தீத்தடுப்புக் கோடுகள் அமைக்கப்படும்’ என்று தெரிவித்தனர்.

Tags : Fire stations ,highlands ,Vellore district ,district fire stations , In the highlands of Vellore district Fire stations will be set soon
× RELATED கல்வராயன் மலைப்பகுதியில் 4,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் அழிப்பு