×

மலாலாவை துப்பாக்கியால் சுட்ட தாலிபான் பயங்கரவாதி...பாகிஸ்தான் ராணுவ சிறையில் இருந்து தப்பியோட்டம்!

இஸ்லமாபாத்: அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் கல்வி உரிமை ஆர்வலருமான மலாலாவை துப்பாக்கியால் சுட்ட பயங்கரவாதி இஷானுல்லா இஷான் பாகிஸ்தான் ராணுவ சிறையில் இருந்து தப்பியுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த தேஹ்ரீக்-இ-தாலிபான் பயங்கரவாத அமைப்பின் செய்தித்தொடர்பாளரும், ஜமாத் உல் அப்ரார் எனும் மற்றொரு பயங்கரவாத அமைப்பையும் மான இஷானுல்லா இஷான். இவர், கடந்த 2014ம் ஆண்டு பெஷாவர் ராணுவப் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக 134 மாணவர்கள் மற்றும் 15 ஆசிரியர்கள் உயிரிழப்பு, ராவல்பிண்டி மற்றும் கராச்சி மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் 9 வெளிநாட்டினர் கொலை, வாகா எல்லையில் தற்கொலைப்படைத் தாக்குதல், 2016ல் லாகூரில் ஈஸ்டர் திருநாளில் வெடிகுண்டுத் தாக்குதல் மூலம் 75 பேர் பலி மற்றும் 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத சதிச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.

குறிப்பாக, பயங்கரவாதிகளின் மனித உரிமை மீறலுக்கு எதிராகவும் பெண் கல்விக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வந்த மலாலா யூசுப்சாய் மீது கடந்த 2012ம் ஆண்டு துப்பாக்கிச்சூடு நடத்தினார். பின்னர் 2017ம் ஆண்டில் இஷானுல்லா இஷான், ராணுவத்திடம் சரணடைந்தார். இருப்பினும் பாகிஸ்தான் ராணுவம் இதுவரை இஷான் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில், கடந்த ஜனவரி 11ம் தேதியே ராணுவ சிறையில் இருந்து தப்பி வெளியேறிவிட்டதாக இஷானுல்லா இஷான் ஆடியோ பதிவு ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். அதில், கடந்த பிப்ரவரி 5, 2017ல் ஏற்படுத்தப்பட்ட 3 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நான் சரணடைந்தேன். ஆனால், பாகிஸ்தான் அதிகாரிகள் அதை மீறி என்னையும், எனது குழந்தைகள் உள்பட குடும்பத்தையும் சிறை வைத்தனர். யாருடன் நான் ஒப்பந்தம் ஏற்படுத்தினேன் என்று விரைவில் தெரிவிப்பேன். அதில் குறிப்பிடப்பட்ட அம்சங்களையும் வெளியிடுவேன். தற்போது எனது குடும்பத்துடன் துருக்கியில் வசித்து வருகிறேன் என்று பேசியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.


Tags : Taliban ,Taliban Terrorist Who Shot Malala Yousafzai ,army prison ,Malala ,Pakistani ,Jail , Malala, Taliban, Terrorist , Ishanullah Ishaan, Pakistani prison
× RELATED முன்விரோத தகராறில் பயங்கரம் டிராவல்ஸ் அதிபரை ஓடஓட விரட்டி வெட்டி கொலை