×

விஏஓ தேர்விலும் முறைகேடு? : 2016ல் நடந்த விஏஓ தேர்வு ஆவணங்களை டிஎன்பிஎஸ்சியிடம் கேட்கும் சிபிசிஐடி

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றசாட்டை தொடர்ந்து தற்போது விஏஓ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. டிஎன்பிஎஸ்சி முறைகேடு குரூப் 4 தேர்வில் முறைகேடு செய்திருப்பது வெளிவந்ததற்கு பிறகு குரூப் 2A தேர்விலும் முறைகேடு புகார் என்பது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு தேர்வுகளில் முறைகேடு புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த முறைகேடு தேர்வு தொடர்பான புகார்கள் அது சார்ந்த விசாரணைகள் விரிவடைந்து கொண்டே உள்ளன. முக்கியமாக 2016ம் ஆண்டு நடத்தப்பட்ட விஏஓ தேர்வுக்கான விசாரணை விரிவடைந்துள்ளது. நேற்று விஏஓ ஆக இருந்த நாராயணன் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அதன் காரணமாக விஏஓ தேர்விலும் முறைகேடு நடைபெற்றிருக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது.

அதன் அடிப்படையில், 2016ம் ஆண்டு 713 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட விஏஓ தேர்வு குறித்த ஆவணங்களை சமர்பிக்கும்படி டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் சிபிசிஐடி போலீசார் கேட்டு கொண்டிருப்பதாகவும், அது சார்ந்த ஆவணங்களை இன்று அல்லது நாளைக்குள் டிஎன்பிஎஸ்சி சமர்ப்பிக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக விஏஓ தேர்வை பொறுத்தவரையில் விஏஓ பணியிடங்களுக்கு மட்டும் தனியாக ஒரு தேர்வை நடத்தும் நடைமுறைதான் 2017ம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் இருந்தது. 2017ம் ஆண்டு குரூப் 4 தேர்விலிருந்து தான் விஏஓ தேர்வுக்கான பணியிடங்களை, குரூப் 4 பணியிடங்களுடன் சேர்த்து ஒரே தேர்வாக குரூப் 4 தேர்வு மூலமாகவே தேர்வு பணியிடங்களை நிரப்பக்கூடிய நடைமுறை இருந்தது. ஆனால் 2016ம் ஆண்டு விஏஓ பணியிடங்களுக்கு மட்டும் தனியாக தேர்வு நடத்தப்பட்டு வந்தது.

அந்த தேர்வு குறித்த ஒரு விசாரணையை சிபிசிஐடி தொடங்கியுள்ளது. அதற்கான ஆவணங்களை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் சிபிசிஐடியிடம் சமர்பிக்கவுள்ளனர். இது நடந்து முடிந்த தேர்வு என்பதன் காரணமாக இந்த விசாரணை அனைத்தும் சிபிசிஐடி மட்டுமே நடத்தமுடியும் என்பதன் அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி ஆவணங்களை அவர்களிடம் ஒப்படைத்த பிறகு சிபிசிஐடி விசாரணையை நடத்தும் என தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, 2016 ம் ஆண்டு முதல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முதல் 100 இடங்களைப் பிடித்தவர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.


Tags : CBCID ,VAO , VAO Examination, Scandal, 2016, VAO Exam Document, DNBSC, CBCID
× RELATED நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி...