கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து குறைவு

ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து நேற்று குறைவாக இருந்தது. ஆனால், கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுடன் வந்த கால்நடை பராமரிப்புத்துறையினர் மாடுகளை தேர்வு செய்து அங்கேயே பயனாளிகளுக்கு வழங்கியதால் மாடுகள் விற்பனை அதிகமாக இருந்தது. ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை செக்போஸ்ட் பகுதியில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று நடந்த மாட்டுச்சந்தைக்கு மாடுகளை விற்பனை செய்வதற்காக ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பூர், கரூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மாடுகளை கொண்டு வந்தனர்.

நேற்று நடந்த சந்தையில் 300 பசுமாடுகளும், 150 எருமை மாடுகளும், 175 வளர்ப்பு கன்றுகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. வரத்து குறைந்திருந்த நிலையில் விற்பனை அதிகமாக இருந்தது. 90 சதவீத மாடுகள் விற்பனையானது. தமிழக அரசின் சார்பில் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையினர் சந்தைக்கு நேற்று வந்தனர். பின்னர், கறவை மாடுகளை தேர்வு செய்து பயனாளிகளுக்கு அங்கேயே வழங்கினர். இதனால், மாடுகள் விற்பனை அதிகமாக இருந்தது.

மேலும், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, கோவா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி சென்றனர். நேற்று நடந்த சந்தையில் மாடுகள் வரத்து குறைந்திருந்த நிலையில் விற்பனை அதிகமாக இருந்தது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில்,`கடந்த சில வாரமாக மாடுகள் வரத்து குறைவாக இருந்து வருகிறது. ஆனால், விற்பனை நன்றாக உள்ளது. குறிப்பாக, சந்தையில் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்திற்கு மாடுகளை இங்கு வாங்கி பயனாளிகளுக்கு வழங்கி வருகின்றனர். இதனால் விற்பனை அதிகரித்துள்ளது. வெளி மாநில வியாபாரிகளும் வழக்கம்போல் மாடுகளை வாங்கி சென்றனர். அடுத்த வாரத்தில் இருந்து மாடுகள் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என்றனர்.

Related Stories:

>