×

தமிழக-ஆந்திர எல்லையில் முகாமிட்டுள்ள யானையை விரட்ட முடியாமல் தவிக்கும் வனத்துறை ஊழியர்கள்

*தடுப்பு காவலர்கள் இல்லாததால் வேதனை

வேலூர் :  வேலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக-ஆந்திர எல்லையில் முகாமிட்டுள்ள யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறை ஊழியர்கள் தவிக்கின்றனர். தமிழக-ஆந்திர எல்லையான வேலூர் மாவட்டத்தில் உள்ள காடுகளில் இருந்து யானைகள்  வெளியேறி அடிக்கடி ஊருக்குள் புகுந்து விடுகிறது. வனத்துறை அதிகாரிகள் விரட்டினாலும் மீண்டும், மீண்டும் அவை வந்து விடுகின்றன. கடந்த காலங்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வாணியம்பாடி, பேரணாம்பட்டு, குடியாத்தம் போன்ற பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட யானைகள் வரும். பின்னர் சில நாட்களில் மீண்டும் கிருஷ்ணகிரிக்கு சென்றுவிடும். ஆனால் தற்போது 30க்கும் மேற்பட்ட யானைகள் தமிழக-ஆந்திர எல்லை கிராமங்களில் முகாமிட்டுள்ளது. கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடியாத்தம், பேரணாம்பட்டு சுற்றுப்புற பகுதிகளில் யானைகள் விவசாயநிலங்களில் புகுந்து பயிர்களை அழித்து வருகிறது.

இதை வனத்துறை ஊழியர்களும், பொதுமக்களுடன் இணைந்து காட்டுப்பகுதிக்கு விரட்டுகின்றனர். ஆனால் காட்டில் தங்காமல் யானைகள் மீண்டும் வேறு வேறு கிராமங்களுக்குள் புகுந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி, பரதராமி, பூசாரிவலசை ஆகிய கிராமங்களில் உள்ள வனப்பகுதியில் புகுந்தது. நேற்று முன்தினம் இரவு 15க்கும் மேற்பட்ட யானைகள் காட்பாடி அடுத்த பனமடங்கி, பள்ளத்தூர், ராமாபுரம் ஆகிய கிராமங்களில் புகுந்தது. அக்கிராமங்களில் மாமரங்கள் மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தியது.தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள், யானைகளை தமிழக-ஆந்திர எல்லையான ராஜாதோப்பு அடுத்த சித்தப்பாறை காட்டுப்பகுதிக்கு விடிய விடிய விரட்டினர். இருப்பினும் யானைகளை முழுமையாக விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியாக காட்டு யானைகள் இங்கு வந்துள்ளன.  இதை விரட்ட பல்வேறு நடவடிக்கைகள் வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டது. ஊருக்குள் யானைகள் வராமல் தடுக்க பட்டாசு வெடித்து காட்டுக்குள் வனத்துறை ஊழியர்கள் விரட்ட முயன்றனர்.  ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. யானைகள் ஒவ்வொரு நாளும் ஒரு இடத்திற்கு செல்கிறது. கடந்த சில நாட்களாக குடியாத்தம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் சுற்றித்திரிந்து வந்தன.

தற்போது வேலூர் வனச்சரக்கத்துக்கு உட்பட்ட பள்ளத்தூர், ராமாபுரம் ஊருக்குள் புகுந்துள்ளது. இதை விரட்டியடிக்கும் பணியில் வனத்துறை ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். வனத்துறையில் போதுமான ஊழியர்கள் இல்லை. நிறைய பணியிடங்கள் காலியாக உள்ளது.  அதுவும் யானைகளை விரட்டும் அளவுக்கு போதுமான பயிற்சி பெற்ற அலுவலர்கள் இல்லாததால் அதை விரட்டியடிக்க முடியவில்லை. மேலும் வேலூர் மாவட்டத்தில் யானைகளை விரட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் யாரும் இல்லை. இதனால் யானையை சரியான திசையில் காட்டுக்குள் விரட்ட முடியவில்லை. 20க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்களை அனுப்புமாறு வனத்துறை தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் அவர்கள் இங்கு வந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

ஆந்திர வனப்பகுதிக்கு யானைகளை விரட்டினாலும், அம்மாநில வனத்துறையினர் அதை தமிழக பகுதிக்கு விரட்டுகின்றனர். இதனால் யானைகள் தனது இருப்பிடம் தெரியாமல் தவித்து வருகிறது. பொதுமக்கள் யாரும் அதை விரட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டாம். இரவு நேரங்களில் விவசாய நிலங்கள் மற்றும் கொட்டகையில் படுக்க வேண்டாம் என அறிவுறுத்தி வருகிறோம். தொடர்ந்து அந்த யானைகளை கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Elephant camps ,The Forest Department ,border ,Tamil Nadu ,Andhra ,forest , Forest Department. tamilnadu, andra,elephants ,Employess
× RELATED இந்திய எல்லையில் நிலநடுக்கம்