×

உண்மைக்கு புறம்பாக அழகு சாதன பொருட்களை விளம்பரப்படுத்தினால் 5 ஆண்டு சிறை, 50 லட்சம் அபராதம்!: விரைவில் அறிமுகமாகும் புதிய சட்ட திருத்த மசோதா

டெல்லி: உண்மைக்கு புறம்பாக அழகு சாதன பொருட்களை விளம்பரப்படுத்தினால் 5 ஆண்டுகள் சிறை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதற்கு புதிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவரவுள்ளது. எங்களுடைய கிரீமை தொடர்ந்து பயன்படுத்தினால் ஒரே மாதத்தில் உங்கள் முகப்பொலிவு மாறி, புது பொலிவு பெறுவீர்கள். இந்த மாத்திரையை தொடர்ந்து உட்கொண்டால் அஜீரண கோளாறு வராது. இந்த எண்ணையை பயன்படுத்தினால் தலைமுடி உதிராது, நரைமுடி கருப்பாகும். உங்கள் குழந்தை வேகமாக வளர வேண்டுமா? இந்த பானத்தை கொடுங்கள் இதுபோன்ற விளம்பரங்களை நாம் கடந்து செல்லாத நாட்களே இல்லை. இந்த விளம்பரங்களில் சொல்லப்படுவது உண்மையா அல்லது கம்பனிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய மேற்கொள்ளும் விளம்பர யுக்தியா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழும். இதுபோன்ற மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் விளம்பரங்களை கட்டுப்படுத்த 1954ம் ஆண்டே ஏற்றப்பட்ட சட்டம் தான் மருந்து விளம்பரங்கள் கட்டுப்பாட்டு சட்டம்.

காலத்திற்கேற்ப இச்சட்டத்தில் திருத்தும் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டத்தின்படி முதல்முறை குற்றத்திற்கு அபராதம் ஏதுமின்றி 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும். சட்டங்கள் கடுமையாக இல்லாததால் அதிகளவில் போலி விளம்பரங்கள் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தவே புதிய விதிமுறைகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய சட்டத்திருத்த வரைவுப்படி முதல்முறை வழக்குப்பதிவு செய்யப்பட்டால் 10 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். அதே தொடர் குற்றம் என்றால், இந்த அபராத தொகை 50 லட்சமாகவும், சிறை தண்டனை 5 ஆண்டாகவும் அதிகரிக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. சில இடங்களில் தங்களின் மரபு சார்ந்த மருந்துகளால் அரியவகை நோய்கள் குணப்படுத்தப்படும் என சில போலிகள் உலா வருகின்றன.

இது மனிதர்களின் இயற்கையான உடல் சுழற்சியை பாதிக்கக்கூடும். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள இந்த சட்டத்திருத்த வரைவில் அதிசயம், அற்புதம் என ஒளிவடிவிலோ, வீடியோவாகவோ அல்லது அட்டைப்படம், சுவரொட்டி, துண்டு பிரசுரம் என எந்த வகையிலும் சட்டத்திற்கு புறம்பாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. காலத்திற்கு ஏற்ப சட்டத்தை தகவமைத்துக்கொள்ள மேற்கொள்ளப்படும் இந்த சட்டத்திருத்தம் பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் கருத்துக்களை  கேட்டபின்பு விரைவில் சட்டமாக உள்ளது. இதன்முலம் விளம்பரத்திற்காக கற்பனைக்கு மிஞ்சிய செய்திகளை சொல்லாமல் உண்மையை உரக்க சொல்லி பொருட்கள் விற்கப்படும் என நம்பலாம்.


Tags : jail , In fact, the bill for beauty products, advertising, 5 years in prison, a fine of Rs 50 lakh, central government bill
× RELATED புழல் சிறையில் காவலர்கள் சோதனையில்...