×

அதிவேகமாக பரவும் கொரோனா வைரஸ்: ஜப்பான் வந்த கப்பலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்ததால் பீதி!

டோக்கியோ: ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் வந்த கப்பலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளதால், அதில் உள்ளவர்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். உலகை அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி வைரசான கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, இதுவரை 630 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும், மொத்தம் 23 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி இருக்கிறது. இந்நிலையில், வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால் சில வாரங்களிலேயே 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

எனவே, கொரோனா வைரஸ் பாதிப்பு பரவி வருவதால் ஜப்பான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் வந்த டயமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு நடுக்கடிலிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலை நாட்டிற்கு உள்ளே அனுமதிக்காமல் துறைமுகத்திலிருந்து 5 கி.மீ தொலைவிலேயே ஜப்பான் அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்த கப்பலில் சுமார் 2,500 பயணிகளும், 1000க்கும் மேற்பட்ட ஊழியர்களும் உள்ளனர். அவர்களுக்கு தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்த பரிசோதனையில் ஏற்கனவே 20 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 41 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. ஆனால், கப்பலில் உள்ள 3700 நபர்களில் இதுவரை 273 பேருக்கு மட்டுமே கொரோனா குறித்த மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. எனவே, மற்றவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும்போது, மேலும் பலருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்படலாம் என அஞ்சப்படுகிறது.



Tags : Japan ,shipwreck , அதிவேகமாக பரவும் கொரோனா வைரஸ்: ஜப்பான் வந்த கப்பலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்ததால் பீதி!
× RELATED ஜப்பானில் வினோத திருவிழா… குழந்தைகளை...