×

வாட்ஸ்அப்பில் வைரலாகும் பகீர் புகைப்படம் காரைக்குடி அருகே சிறுத்தை நடமாட்டம்?

*பொதுமக்கள் அச்சம்

காரைக்குடி : காரைக்குடி அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக வாட்ஸ் அப்பில் புகைப்படம் வைரலாகி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கொத்தமங்கலத்தில் 300 ஏக்கருக்கு மேல் வனப்பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் மான் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. பள்ளத்தூரில் இருந்து கொத்தமங்கலம் செல்லும் சாலையில் உள்ள காட்டு பகுதியில் சிறுத்தை நின்று கொண்டிருப்பது போலவும், அதனை கார் முகப்பு வெளிச்சத்தில் போட்டோ எடுத்தது போலவும் வாட்ஸ் அப்பில் கடந்த இரண்டு நாட்களாக ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். இரவு நேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

நேற்று வனத்துறை அதிகாரி மணிவண்ணன் தலைமையிலான குழுவினர் வாட்ஸ் அப்பில் படம் வெளியான பகுதியை ஆய்வு செய்தனர். அங்கு சிறுத்தை இருந்ததற்கான எந்த அடையாளமும் இல்லை. சிறுத்தை கால் தடமும் இல்லை.
பின்னர் வனத்துறை அதிகாரி மணிவண்ணன் கூறுகையில், ‘‘இந்த செய்தி உண்மையல்ல. கிராபிக்ஸ் செய்து படத்தை யாரோ வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணை செய்து வருகிறோம்’’ என்றார். கிராம மக்கள் கூறுகையில், ‘‘சிறுத்தை பீதியால் கடந்த 2 நாட்களாக வெளியே செல்வதையே தவிர்த்து வந்தோம். வெளியூரில் இருந்து வருபவர்களும் ஊருக்கு வராமல் தவிர்த்து வந்தனர். கிராபிக்ஸ் படத்தை உலவ விட்டவர்களை கண்டுபிடித்து உரிய தண்டனை தர வேண்டும்’’ என்றனர்.

Tags : karaikudi , Social Media,Leopard ,karaikudi,Forest Department,viral
× RELATED “சர்வாதிகார நாடுகளை போல பாஜக ஆட்சி உள்ளது” : கார்த்தி சிதம்பரம்