×

ராமேஸ்வரம் தீவில் ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை 11 ‘டம்மி தீவிரவாதிகள்’ சிக்கினர்

*11 ‘டம்மி தீவிரவாதிகள்’ சிக்கினர்
*பாதுகாப்பை கேலிக்கூத்தாக்குவதா?
*பொதுமக்கள், மீனவர்கள் அதிருப்தி

ராமேஸ்வரம் : பாக் ஜலசந்தி கடல் பகுதியில் நடத்தப்பட்ட ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகையில் இந்திய கடற்படை, கமாண்டோ படை வீரர்கள் என 11 டம்மி தீவிரவாதிகள், மரைன் போலீசாரிடம் பிடிபட்டனர். பெயரளவில் நடத்தப்பட்ட ஒத்திகையால் பொதுமக்கள், மீனவர்கள் மத்தியில் அதிகாரிகளின் செயல் கேலிக்கூத்தாகியுள்ளது. மும்பையில் நடந்த தீவிரவாதிககளின் வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து, இந்திய கடல் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கடலில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய, மாநில பாதுகாப்பு ஏஜென்சிகளின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஒத்திகையும் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் நேற்று முன்தினம் இரவு முதல் தமிழக கடல் பகுதியில் ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் ஜலசந்தி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில், தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் விதமான ஒத்திகை நடந்தது. இதையொட்டி இரண்டு கடல் பகுதியிலும் இந்திய கடற்படை, கடலோர காவல்படை மற்றும் தமிழக மரைன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். புலனாய்வு துறையினரும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று காலை ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து மீன்பிடி துறைமுகத்திற்கு ரயில்வே பீடர் ரோட்டில் நடந்து சென்ற இருவர், தங்கச்சிமடம் சூசையப்பர்பட்டினம் கடல் பகுதியில் படகில் வந்த 5 பேர், மண்டபம் வடக்கு ஜெட்டி பாலத்தில் 4 பேர் உட்பட 11 பேரை மரைன் போலீசார் பிடித்தனர். இவர்களிடம் இருந்த டம்மி வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டன. பிடிபட்ட இந்திய கடற்படை (7 பேர்) மற்றும் சென்னை கமாண்டோ படையை சேர்ந்த (4 பேர்) 11 வீரர்களை மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். மரைன் எஸ்பி ஜெயந்தி இவர்களிடம் விசாரணை செய்தார்.

நேற்று நடந்த ‘சாகர் கவாச்’ ஒத்திகையும், டம்மி வெடிகுண்டுகளுடன் வீரர்கள் பிடிப்பட்டது அனைத்தும் முன்கூட்டியே அனைத்துத்துறையினருக்கும் தெரிந்தே நடந்திருக்கும் தகவல் வெளியாகி, இதில் ஈடுபட்ட அதிகாரிகளின் செயல் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் மத்தியில் கேலிக்கூத்தாக்கியுள்ளது. பொதுவாக, இதுபோன்ற பாதுகாப்பு ஒத்திகை முறை போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட மாட்டாது. சம்பவத்தில் ஈடுபடும் கடற்படை, கமாண்டோ படை வீரர்கள், தங்களது உயரதிகாரிகளுக்கு, குறிப்பிட்ட இடத்தில் டம்மி குண்டுகள் ைவத்திருப்பது பற்றியோ அல்லது தங்களது ஊடுருவல் திட்டம் குறித்தோ தகவல் தெரிவிப்பார்கள். இதை போலீசார் எப்படி கண்டுபிடிக்கிறார்கள்கள், அவர்களது கண்காணிப்பு எப்படி இருக்கிறது என்று அறிந்து கொள்வதே, இந்த ஒத்திகையின் பிரதான நோக்கம்.

ஆனால், இம்முறை ராமேஸ்வரம் பகுதியில் நடந்த ஒத்திகை விபரம் மரைன் போலீசார் முதல், அனைவருக்கும் முன்னதாகவே தெரிவிக்கப்பட்டு விட்டது. இதில் பங்கேற்பதற்காக வந்த கடற்படை, கமாண்டோ படை வீரர்களுக்கு, ராமேஸ்வரம் கோயில் அருகில் உள்ள தங்கும் விடுதியில் தங்குவதற்கு ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இவர்களில் ஒரு பிரிவினர் ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து படகில் ஏறி தங்கச்சிமடம் சூசையப்பர்பட்டினம் கடல் பகுதிக்கு வரவேண்டும் எனவும், அங்கு காத்திருக்கும் மரைன் போலீசார் இவர்களை பிடிக்கவும் முன்கூட்டிய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்து இருவர் அடங்கிய இரண்டாவது பிரிவினர் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து துறைமுக கடற்கரைக்கு நடந்து செல்லும்போது மரைன் போலீசார் பிடிப்பது, மூன்றாவது பிரிவினர் மண்டபம் வடக்கு கடற்கரை ஜெட்டி பாலத்தில் படகில் ஏறும்போது பிடிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. திட்டமிட்டபடி ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் டம்மி குண்டுகளுடன், கடலில் செல்வதற்காக, ராமேஸ்வரம் துறைமுகத்தில் ஒரு மீன்பிடி படகை ஏற்பாடு செய்து வைத்திருந்தனர். அந்த படகில் செல்ல வேண்டிய 5 பேரையும் மரைன் போலீசார் அழைத்து வந்து ஏற்றி அனுப்பி வைத்தனர். படகில் சென்ற இவர்கள் திட்டமிட்டபடி தங்கச்சிமடம் சூசையப்பர்பட்டினம் கடல் பகுதிக்கு சென்றதும், மரைன் போலீசார் இவர்களை பிடித்து கரைக்கு அழைத்து வந்தனர்.

இதுபோல் ரயில் நிலையத்தில் இருந்து கடற்கரைக்கு நடந்து சென்ற இருவர், மண்டபம் ஜெட்டி பாலத்தில் படகிற்காக காத்திருந்த 4 பேரையும் மரைன் போலீசார் பிடித்தனர். திரைமறைவில் திட்டமிட்டு பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் மத்தியில், பிடிபட்ட வீரர்களை அழைத்து சென்று படம் காட்டிய அதிகாரிகளின் இச்செயல் பொதுமக்கள் மத்தியில் கேலிக்கூத்தாக்கியுள்ளது. கடந்த ஆண்டும் இதே நடைமுறையே பின்பற்றப்பட்டது. அப்போதும் சென்னையில் இருந்து ரயிலில் வந்த கடற்படை வீரர்களை, ரயில் நிலையத்தில் வரவேற்று அழைத்து சென்றதே மரைன் போலீசார்தான். கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவினால் தடுப்பதற்கு நமது கடல் பகுதியில் பாதுகாப்பு ஏஜென்சிகள் தயார் நிலையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக நடத்தப்படும் பாதுகாப்பு ஒத்திகையை, பெயரளவில் செயல்படுத்தி உயரதிகாரிகளிடம் பெயர் வாங்க மரைன் போலீசார் இச்செயலில் ஈடுபட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கடற்படை கப்பலில் அழைத்து வரப்படும் வீரர்கள், நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் படகில் இறக்கி விடப்பட்டு தமிழக கடற்கரை பகுதிகளுக்கு வந்தனர். ரயில், பேருந்து மூலமும் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று திட்டமிட்டபடி டம்மி வெடிகுண்டுகளை வைத்துவிட்டு உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து வந்தனர். ராமேஸ்வரம் கோயில் சுவாமி சன்னதியில் டம்மி குண்டுகளை வைத்துவிட உயரதிகாரிகளின் உத்தரவுக்குப்பின் குணடுகளையும், ஊடுருவிய வீரர்களையும் பிடித்த சம்பவம் நடைபெற்றது.

இதனால் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்ட போலீசார், கண்காணிப்பில் கோட்டை விட்டதால் உயரதிகாரிகளின் கண்டனத்திற்கு உள்ளாயினர். இதனைத் தவிர்க்கவே தற்போது இந்த நடைமுறையை போலீசார் கையில் எடுத்துள்ளதாக புலனாய்வு துறையினர் தெரிவித்துள்ளனர். நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகை குறித்து மத்திய, மாநில புலனாய்வு துறையினர் தங்களது உயரதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளனர்.

Tags : Sagar Kawach ,security rehearsal ,Rameshwaram island ,Operation Sagar Kavach ,Rameshwaram 11 Dummy Terrorist , Sagar Kavach,Operation Sagar Kavach,Rameshwaram ,Dummy terrorist
× RELATED ஆடுகளை வேட்டையாடும் நாய்கள் கூட்டம்