×

அமெரிக்க தாக்குதலில் அல் கொய்தா அமைப்பின் முக்கிய தலைவர் காசிம் அல்-ரெய்மி பலி: வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க தாக்குதலில் அல் கொய்தா அமைப்பின் முக்கிய தலைவர் காசிம் அல்-ரெய்மி உயிரிழந்ததாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. அல்-கொய்தாவின் ஏ.கியூ.ஏ.பி. அமைப்பானது 2009ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அமெரிக்காவுக்கு ஆதரவு தரும் நாடுகளைக் குறிவைத்து இந்தக் கிளை இயக்கம் தொடங்கப்பட்டது. ஏமனில் இந்த இயக்கம் அரசியல் ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்தியதில் வெற்றி கண்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எண்ணெய் வளங்களையும், வெளிநாட்டினரையும், பாதுகாப்புப் படையினரையும் இந்த அமைப்பு குறிவைத்து தாக்கும். இதன் மூலம் சவுதி மற்றும் ஏமன் நாட்டின் அரசாங்கங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும் இந்த அமைப்பு இருந்து வந்துள்ளது.

இந்த இருநாடுகளிலும் நடைபெற்ற பெரும்பாலான தாக்குதலுக்கு இந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இவர்களின் தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2015ம் ஆண்டு ஜூன் மாதம் ஏ.கியூ.ஏ.பி. அமைப்பின் அப்போதைய தலைவராக இருந்த நாசர்-அல்-வுஹாய்ஷி வான் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவர் சர்வதேச அல்-கொய்தா அமைப்பின் இரண்டாவது பெரிய தலைவராகவும் இருந்து வந்தார். நாசரின் மரணத்துக்கு பின்னர் அவரது இடத்துக்கு வந்தவர்தான் காசிம் அல்-ரெய்மி. இவர், அமெரிக்கவிற்கு ஒசாமா பின் லேடனுக்கு பிறகு பெரிய அளவில் எதிரியாக திகழ்ந்து வந்தார். ரெமியை பிடிக்க பலமுறை அமெரிக்க ராணுவம் முயன்றது. இந்த நிலையில், காஸிம் அல்-ரெமி அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டதாகத் கடந்த மாதம் முதலே தகவல்கள் பரவின.

எனினும் அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், அமெரிக்க கடற்படை தளத்தை குறிவைத்து அல் கொய்தா பயங்கரவாத இயக்கம் தாக்குதல் நடத்திய நிலையில், அரேபிய தீபகற்பத்தில் அல் கொய்தா அமைப்பை நிறுவியவரும், அல் கொய்தா இயக்கத்தின் துணை தலைவருமான காசிம் அல்-ரெய்மி, அமெரிக்கா நடத்திய பதில் தாக்குதலில் கொல்லப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ரெய்மி, ஏமனில் உள்ள அப்பாவி மக்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தியதாகவும், அமெரிக்கா மற்றும் அமெரிக்க படைகள் மீது பல தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த தாக்குதல் எப்போது நடைபெற்றது, எந்த சூழலில் நடைபெற்றது என்பது குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.


Tags : Qasim al-Raimi ,White House ,attack ,organization ,al Qaeda ,announcement ,US ,death , America, Al Qaeda, Qasim al-Raymi, President Trump, Yemen,White House
× RELATED போராட்டம் நடத்த இருந்த நிலையில்...