×

மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் அமையும் இடத்தில் ஜப்பானிய குழுவினர் ஆய்வு

*இந்த ஆண்டு இறுதியில் நிதி ஒதுக்கீடு?

திருப்பரங்குன்றம் : மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தில், ஜப்பானிய மானிய நிதி குழுவினர் ஆய்வு செய்தனர்.மதுரை மாவட்டம், தோப்பூரில் சுமார் 224 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதன் முதல்கட்ட பணிக்காக 2019ம் ஆண்டு இறுதியில் மத்திய அரசு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்தது. இதில் சுமார் 5 கிமீ சுற்றளவில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை செல்வதற்காக 6.4 கிமீ தூரத்திற்கு புதிதாக சாலை அமைப்பதற்காக ரூ.21.20 கோடி நிதியை மத்திய நெடுஞ்சாலைத்துறை ஒதுக்கியது.

இதனைத்தொடர்ந்து கூத்தியார்குண்டு முதல் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள பகுதி வரை 3.5 கிமீ தூரம் நான்கு வழிச்சாலை, எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து கரடிப்பட்டி வரை 2.9 கிமீ தூரத்திற்கு இருவழிச்சாலை பணிகள் நடந்து வருகின்றன. நேற்று காலை மத்திய மருத்துவ கட்டுமான பணிகள் நிறுவனம் மற்றும் 7 பேர் கொண்ட ஜப்பானிய நிதி மானிய குழுவினர் தோப்பூர் வந்தனர். இவர்கள் தற்போது நடைபெற்று வரும் சுற்றுச்சுவர், சாலை உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டனர். இப்பணிகள் நிறைவு பெற்ற பின்னர் ஜப்பானிய நிதி மானிய குழுவினர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்குவார்கள் எனவும், அதாவது இந்த ஆண்டு இறுதிக்குள் ஜப்பானிய குழு நிதியுதவி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் நிதி ஒதுக்கப்படாத நிலையில் ஜப்பானிய குழுவினர் 2வது முறையாக பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : crews ,AIIMS ,Japanese ,Madurai ,Toppur ,Japan , madurai,AIIMS Hospital,Japan team
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...