×

பந்தளம் அரண்மனையில் பாதுகாக்கப்படும் சபரிமலை திருவாபரணத்தை அரசு ஏற்க தேவையில்லை: கேரள தேவசம்போர்டு அமைச்சர் பேட்டி

திருவனந்தபுரம்: பந்தளம்   அரண்மனையில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் திருவாபரணத்தை அரசு ஏற்க  வேண்டிய  அவசியம் இல்லை என கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி  சுரேந்திரன் கூறினார்.சபரிமலை  ஐயப்பன் கோயிலில்  வருடம்தோறும் மகரவிளக்கு பூஜையையொட்டி திருவாபரணம்  அணிவித்து தீபாராதனை  நடத்தப்படும். அப்போது பொன்னம்பலமேட்டில் மகர விளக்கு தெரியும். இந்த  திருவாபரணம் பந்தளம்  அரண்மனையில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.  மகரவிளக்கு பூஜைக்கு  முன்னதாக திருவாபரணம் பேடகங்களில் வைத்து ஊர்வலமாக  எடுத்து வரப்படும்.

 இந்நிலையில்  சபரிமலை ஐயப்பன் கோயிலை  நிர்வகிக்க தனி அமைப்பை ஏற்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு  தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. வழக்கை  விசாரித்த நீதிபதி ரமணா, பந்தளம் மன்னர் குடும்பம் தரப்பில் ஆஜரான  வக்கீலிடம், சபரிமலை  கோயிலுக்கு ஒப்படைக்கப்பட்ட திருவாபரணத்தை நீங்கள்  ஏன் சொந்தமாக  வைத்திருக்கிறீர்கள். அதை ஏன் அரசிடம் ஒப்படைக்கக் கூடாது என  கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக வரும்  வெள்ளிக்கிழமைக்குள் அரசு  விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறினார். இது தொடர்பாக கேரள  தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், ‘‘திருவாபரணத்தை அரசு ஏற்க வேண்டிய  அவசியம் இல்லை. அது போலீஸ்  பாதுகாப்புடன் தான் வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : government ,Kerala Devasport Board ,Interview ,Sabarimalai ,Pandalam Palace ,Minister ,Kerala Devasport ,The Sabarimala Return , Sabarimala Return, Government,Kerala Devasport ,Minister
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...