×

இலங்கையில் புலிகளுக்கு எதிரான போரில் இங்கிலாந்து பைலட்களை இந்தியா பயன்படுத்தியது: புதிய புத்தகத்தில் அதிர்ச்சி தகவல்

லண்டன்: இலங்கையில் தமிழ் ஈழ கோரிக்கையை வலியுறுத்திய விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே  கடந்த 1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை போர் நடந்தது. இறுதிக்கட்ட போரில் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். அத்துடன் இலங்கை போர் முடிவுக்கு வந்தது. தற்போது, இந்த, போரின்போது நடந்த பல ரகசிய நடவடிக்கைகள் பற்றி இங்கிலாந்தைச் சேர்ந்த புலனாய்வு பத்திரிக்கையாளர் பில் மில்லர் என்பவர் புத்தகம் ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டார். அதன் பெயர் கீனே-மீனே. ரகசியமாக செய்யப்படும் வேலைகளை அரபிக் மொழியில் இவ்வாறு குறிப்பிடுவது உண்டு. இந்த புத்தகத்தில் கூறியிருப்பதாவது:இலங்கை போர் தொடங்கிய காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இந்தியா செயல்பட்டது. விடுதலைப் புலிகளை தோற்கடிக்க இங்கிலாந்தின் உதவியை அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே நாடியுள்ளார். இலங்கைக்கு  படைகளை அனுப்பினால் இந்தியா உடனான வர்த்தக, ராணுவ உறவுகள் பாதிக்கப்படும் என இங்கிலாந்து நினைத்தது. அதனால், படைகளை அனுப்ப மறுத்து விட்டது.

இலங்கை படையினருக்கு பயிற்சி அளிக்க இங்கிலாந்து முடிவு செய்தபோது, அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் தனி தூதர் கோபால்சாமி பார்த்தசாரதி, இங்கிலாந்து தூதர் சர் அந்தோணி ஆக்லேண்டுக்கு எச்சரிக்கை விடுத்தார்.அந்த காலத்தில் தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்க இங்கிலாந்தின் ‘கீனே மேனே சர்வீஸஸ் (கேஎம்எஸ்) என்ற ரகசியப் படை பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த அமைப்பை இங்கிலாந்து விமானப்படையின் ஓய்வு பெற்ற கர்னல் ஜிம் ஜான்சன் வழி நடத்தியுள்ளார். இதில் இங்கிலாந்தின் மாஜி ராணுவ பைலட்கள் இடம் பெற்றுள்ளனர். பணத்தை செலுத்தி கூலிப்படை போல் இவர்களை ரகசியமாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஏமன், ஓமன் உள்நாட்டு போரிலும் இவர்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த கேஎம்எஸ் சர்வீஸை இலங்கை பயன்படுத்திக் கொள்ள இங்கிலாந்து அனுமதித்தது. இதற்கு, இந்திய தூதர்கள் முதலில் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்தனர்.

ஆனால், 1980ம் ஆண்டுகளில் இலங்கைக்கு இந்தியா அமைதிப்படையை அனுப்பி, புலிகள் மீது தாக்குதல் நடத்தியபோது இந்த கேஎம்எஸ் பைலட்டுகளின் சேவையை இந்தியா பயன்படுத்தியது. யாழ்பாணத்தில் புலிகளுக்கு எதிரான தாக்குதலில் வான் தாக்குதல் மற்றும் வான் பாதுகாப்பு நடவடிக்கைக்கு, இலங்கை விமானப் படை ஹெலிகாப்டர்களை ேகஎம்எஸ் பைலட்டுகள் கடந்த 1987ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி வரை இயக்கி உள்ளனர். இதை ஜான்சன் உறுதிப்படுத்தியதாக இலங்கையில் உள்ள இங்கிலாந்து தூதர் டேவிட் கிளாட்ஸ்டோன் என்பவர் குறிப்பிட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.



Tags : UK ,India ,pilots ,war ,Sri Lanka ,LTTE , war, LTTE , Sri Lanka,new book
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...