×

மணலி சிபிசிஎல் மத்திய அரசு நிறுவனத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் பாரபட்சம்

* வட மாநிலத்தவருக்கு முன்னுரிமை ˜ * பொதுமக்கள் சரமாரி குற்றச்சாட்டு

திருவொற்றியூர்:  மணலி சிபிசிஎல் மத்திய அரசு நிறுவனத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில்லை என்றும், ஒப்பந்த தொழிலாளர்களுக்குகூட வடமாநிலத்தவர்களை நியமனம் செய்துள்ளனர் என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மணலியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான சிபிசிஎல் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர் மற்றும் அலுவலர்கள், மூவாயிரத்துக்கு மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இந்த நிறுவனத்தின் விரிவாக்கப் பணியில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த விரிவாக்கப் பணியை ஒப்பந்தம் எடுத்திருப்பவர்கள் பெரும்பாலும் வடஇந்தியாவை சேர்ந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்தி உள்ளனர்.இதனால் சிபிசிஎல் நிறுவனத்தை சுற்றியுள்ள மணலி, சின்னசேக்காடு, சடயங்குப்பம் போன்ற பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சிபிசிஎல் விரிவாக்க பணிக்கு உள்ளூர் பகுதி இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘சிபிசிஎல் நிறுவனத்தை சுற்றி ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிறுவனத்தில் இருந்து வெளியேற கூடிய மாசுக்களால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். ஆனாலும் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்னையை கருத்தில் கொண்டு இந்த சிபிசிஎல் மத்திய அரசு நிறுவனம் இயங்குவதற்கு ஆதரவளித்து வருகின்றனர்.இவ்வாறு ஆதரவளித்து வரும் பொதுமக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காமல் நிறுவன அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். இதனால் இங்கு வசிக்கும் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் சிரமப்படுகின்றனர். மேலும் வெளியூர்களுக்கு சென்று வேலை செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே சுற்றுவட்டார பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு இங்குள்ள இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்’’ என்றனர்.

விவசாய நிலங்கள் பறிப்பு
மணலி சிபிசிஎல் நிறுவன விரிவாக்கத்திற்காக மணலி ஆமுல்லைவாயல், வைக்காடு ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்பட்டு கொடுக்கப்பட்டது. அப்போது நிலங்கள் கொடுத்தவர்களுக்கு நிறுவனத்தில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள நிலங்களையும், இழந்து வேலை வாய்ப்பும் இல்லாமல் சிரமப்படுகின்றனர்.

Tags : Manali ,CBCL Central Government Institute ,Manali CBCL Central Govt Discrimination in Employment for Local Youth , Manali CBCL, Central Govt,local youth
× RELATED மணலி சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்