குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக காங்கிரசும், கம்யூ.க்களும் மக்களை தூண்டுகின்றன: மக்களவையில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெறும் இடங்களில், காங்கிரசும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் மக்களை தூண்டி வருகின்றன,’ என பிரதமர் மோடி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கியது. இதன் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் கடந்த 2 நாட்களாக நடந்தது. இதற்கு பதிலளித்து பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) எந்த மதத்தையும் சேர்ந்த இந்திய குடிமகனுக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதை மீண்டும் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். இது, சிறுபான்மையினர் நலனை பாதிக்காது.

சிஏஏ-வுக்கு எதிரான போராட்டங்களில் காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் மக்களை தூண்டுகின்றன. நாட்டின் முன்னோர்களின் விருப்பத்தின் அடிப்படையில், எங்கள் அரசு முடிவுகளை எடுக்கிறது. இது, காங்கிரசுக்கு பிரச்னையாக உள்ளது. இந்தியாவை துண்டாட நினைக்கும் கும்பலுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புபவர்கள்தான் சிஏஏ-வுக்கு எதிராக பேசுகின்றனர். மக்களால் பதவியில் இருந்து இறக்கப்பட்டவர்கள், நினைத்துப் பார்க்க முடியாததை எல்லாம் செய்கின்றனர். அவர்கள் மக்களை மதத்தின் அடிப்படையில் பார்க்கின்றனர். நாங்கள்  ஒவ்வொருவரையும் இந்தியர்களாக பார்க்கிறோம்.

கடந்த 1984ம் ஆண்டு நடந்த சீக்கிய கலவரத்தில் தொடர்புடைய நபர் முதல்வராகி இருக்கிறார். சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை நினைத்துப் பார்க்காமல் ஒரு கட்சி மதசார்பின்மை பற்றி பேசுகிறது. இது அவமானம். குற்றம் செய்தவர்களை தண்டிக்க அவர்கள் முயற்சி எடுக்கவில்லை.எங்கள் பணியை கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் பார்த்தனர். அதனால்தான், எங்களை மீண்டும் ஆட்சியில் அமர வைத்தனர். இந்திய மக்கள் அரசை மட்டும் மாற்றவில்லை. நாட்டையும் மாற்றி உள்ளனர். பழைய வழிமுறைகளை நாங்களும் பின்பற்றி இருந்தால், காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு இருக்காது. முத்தலாக் பிரச்னையால் முஸ்லிம் பெண்கள் தொடர்ந்து கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். ராமர் கோயில், கர்தார்பூர் சாஹிப் பாதை பிரச்னைகள் தீர்க்கப்படாமல் இருந்திருக்கும். அவசர நிலை அறிவிக்கப்பட்டபோது, அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டும் என காங்கிரஸ் நினைக்கவில்லை. பல மாநில அரசுகளை  கவிழ்த்தபோது, அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் என்ற மந்திரம் அவசியம் என்பது அதற்கு நினைவில்லை.

நிதிப் பற்றாக்குறை, விலைவாசியை அரசு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அரசியல் காரணமாக  பிரதமரின் கிசான் திட்ட பயன்களை விவசாயிகள் பெற சில மாநிலங்கள் அனுமதிக்கவில்லை. விவசாயிகள் நலனில் அரசியல் வேண்டாம் என வேண்டுகிறேன். விவசாயிகள் வளம் பெற நாம் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அதன்பின், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. பிரதமர்் மோடி மொத்தம் 90 நிமிடங்கள் பேசினார். பின்னர், மாநிலங்களவையிலும் இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

காஷ்மீரில் ஊழல் தடுப்பு பிரிவு

மாநிலங்களவையில் மோடி பேசுகையில், ‘‘ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக, காஷ்மீர் மக்களுக்கு இடஒதுக்கீடு சலுகை கிடைத்துள்ளது. முதல் முறையாக ஊழல் தடுப்பு பிரிவும் தொடங்கப்பட்டு உள்ளது. ஜம்மு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து யாரிடமும் ஆலோசிக்காமல் ரத்து செய்யப்பட்டதாக உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். அது தவறு. இது குறித்து நடந்த விரிவான விவாதத்தை இந்த நாடே பார்த்தது.’’ என்றார்.

ராகுல் டியூப் லைட்

சில நாட்களுக்கு முன் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘வேலை வாய்ப்பை உருவாக்க தவறிய பிரதமரை, இன்னும் 6 மாதத்தில் இளைஞர்கள் பிரம்பால் அடிப்பார்கள்,’ என கூறினார். இதற்கு தனது உரையில் பதிலளித்த மோடி, ‘‘மோடியை இளைஞர்கள் பிரம்பால் அடிப்பார்கள் என காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியிருக்கிறார். அதை தாங்கி கொள்ள, இன்னும் அதிகளவில் சூரிய நமஸ்காரம் செய்ய முடிவு செய்துள்ளேன்.’’ என்றார். அப்போது திடீரென எழுந்த ராகுல் காந்தி, ‘‘அமளி காரணமாக நீங்கள் பேசுவது சரியாக கேட்கவில்லை,’’ என்றார்.இதற்கு மோடி அளித்த பதிலில், ‘‘நான் 40 நிமிடங்களாக பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால், மின்சாரம் அங்கு செல்ல (புரிந்து கொள்ள) இவ்வளவு நேரமாகியுள்ளது. சில டியூப் லைட்கள் இப்படித்தான் வேலை செய்கின்றன,’’ என ராகுலை மறைமுக விமர்சித்தார். இதனால், அவையில் சிரிப்பலை எழும்பியது.

2 நிமிடம் பேசியிருக்கலாம்

 பிரதமரின் உரைக்குப் பின் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் அளித்த பேட்டியில், ‘‘பிரதமர் தனது ஒன்றரை மணி ேநர உரையில், 2 நிமிடங்கள் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பற்றி பேசி இருக்கலாம். நாட்டை திசை திருப்புவதுதான் அவரின் ஸ்டைல். 2 கோடி வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என அவர் கூறினார். ஆனால், கடந்தாண்டில் ஒரு கோடி இளைஞர்கள் வேலை இழந்தனர். அது பற்றி பிரதமரால் பேச முடியவில்லை,’’ என்றார்.  

கனிமொழி கண்டிப்பு

பட்ஜெட் தாக்கலின் போது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘சிந்து சமவெளி நாகரீகத்தை சரஸ்வதி சிந்து சமவெளி நாகரீகம்’ என குறிப்பிட்டார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மக்களவையில் திமுக எம்பி கனிமொழி நேற்று பேசுகையில், ‘‘தற்போதைய இந்தியாவுக்கு மட்டும் மோடி அரசு காவி சாயம் பூசவில்லை, வரலாற்றில் உள்ள கடந்த கால சம்பவங்களுக்கும் காவி சாயம் பூசுகிறது. வரலாற்று அறிஞர்கள் கூட தெரிவிக்க முடியாத விஷயத்தை, நிர்மலா சீதாராமன் எப்படி குறிப்பிட்டார் என்பது ஆச்சர்யமாக உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும்போது, பட்ஜெட் இலக்குகளை இந்த அரசு எப்படி அடைய போகிறது? ராணுவ நிதி ஒதுக்கீடுக்கு மாநிலங்களிடம் நிதி கேட்கும் நடவடிக்கை சரியல்ல. ராணுவம் மத்திய அரசின் கீழ் வருவதால், அதன் செலவை மத்திய அரசே ஏற்க வேண்டும்,’’ என்றார்.

Related Stories: