×

ஆன்லைன் வர்த்தக கொள்ளை அரசுக்கு தெரியுமா? மக்களவையில் திமுக எம்பி தயாநிதிமாறன் கேள்வி

புதுடெல்லி: ஆன்லைன் வர்த்தகத்தால், சில்லறை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற புகார்கள் தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய சென்னை தொகுதி திமுக எம்பி தயாநிதிமாறன் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.  மத்திய சென்னை தொகுதி திமுக எம்பி தயாநிதிமாறன், மக்களவையில் பேசும்போது, ‘‘கைத்தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அமேசான் போன்ற ஆன்லைன் வர்த்தகத்தால் சில்லறை விற்பனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏற்படும் பெரும் இழப்புகள் குறித்து ஏதாவது விசாரணை நடத்தப்படுமா? அமேசான் நிறுவனம் கொள்ளையடிக்கும் விலை குறித்து அமைச்சகத்திற்கு தெரியுமா? அப்படியானால் அதைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளின் விவரங்கள் என்ன? தொலைத் தொடர்புத் துறையில் இதேபோன்ற கொள்ளையடிக்கும் முறையை அமைச்சகம் அறிந்திருக்கிறதா? அதைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளின் விவரங்கள் என்ன?’’ என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறியதாவது: இ-காமர்ஸ் சந்தை நிறுவனம் அல்லது இ-காமர்ஸ் சந்தை நிறுவன நேரடி அல்லது மறைமுக ஈக்விட்டி (நிறுவனத்தில் இருக்கும் கேப்பிட்டல்) அல்லது பொதுவான கட்டுப்பாட்டைக் கொண்ட பிற நிறுவனங்களால் சேவைகளை வழங்க வேண்டும். ஏதேனும் விதிமீறல் புகாரளிக்கப்பட்டால், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இ-காமர்ஸ் துறையில் தற்போதுள்ள அந்நிய நேரடி முதலீட்டு (எப்.டி.ஐ) கொள்கை, இ-காமர்ஸ் சந்தைகள் பொருட்கள் அல்லது சேவைகளின் விற்பனை விலையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்காது. இருப்பினும் பிளிப்கார்ட் இன்டர்நெட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக சிசிஐ சமீபத்தில் ஒரு உத்தரவிட்டது. தள்ளுபடி மற்றும் முன்னுரிமை பட்டியல் விளம்பரத்தை அந்த உத்தரவு கட்டுப்படுத்தும். தொலைத் தொடர்புத் துறையில் கொள்ளையடிக்கும் விலை உயர்வு குறித்து, இந்த துறைக்கு தெரியாது என்றார்.

தமிழகத்தை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?
எம்பி தயாநிதிமாறன் தனது கேள்வியில் கூறியதாவது: மத்திய நிதி ஆயோக்கின் அறிக்கைப்படி இந்தியாவில் உள்ள பத்து மாநிலங்களில் நிலத்தடி நீர் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகமும் ஒன்றாகும், அதிலும் நான் சார்ந்திருக்கின்ற மத்திய சென்னையிலும் நிலத்தடி நீரின் அளவு குறைந்தே வருகின்றது. நிதிஆயோக்கின் மூலம் 6000 கோடி ரூபாயினை ஒதுக்கி உள்ளீர்கள். ஆனால் தமிழகம், பஞ்சாப், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் எந்த பணியையும் தொடங்கவில்லை, எதற்காக நீங்கள் தமிழகத்தை புறக்கணிக்கின்றீர்கள்? தமிழகத்தில் உங்கள் பாதத்தை அடிவருடும் அரசு தானே ஆட்சியில் இருக்கின்றது? தயவு கூர்ந்து தண்ணீர் பிரச்னை தீர தமிழகத்திற்கு ஏதாவது செய்யுங்கள் என்றார்.

Tags : Dayanidhimaran ,state ,DMK ,Lok Sabha , Online business robbery, Lok Sabha, DMK MP Dayanidhiran
× RELATED புயலுக்கு கேட்ட நிவாரணம்...