×

இந்தியா-ரஷ்யா கூட்டு முயற்சியில் காமோவ் ஹெலிகாப்டர்களை தயாரிக்க இந்தியா முழு தீவிரம்: முதல் பிரிவு 2025ல் கிடைக்கும்

லக்னோ : இந்தியா-ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் தயாராகும், ‘காமோவ் 226டி’  ராணுவ ஹெலிகாப்டரின் முதல் பிரிவு 2025க்குள் இந்தியாவில் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவாவில் கடந்த 2016 அக்டோபரில் நடந்த 8வது  பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், இந்தியா-ரஷ்யா நாடுகளுக்கு இடையே, 200 ‘காமோவ் 226டி’  ரக ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் புதிய கூட்டு ஒப்பந்தம் ஏற்பட்டது.  இதன்படி, இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனமும்,, ரஷ்யாவைச்  சேர்ந்த இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சியிலும் `இந்திய-ரஷ்யா ஹெலிகாப்டர்  நிறுவனம்’ என்ற பெயரில் ஹெலிகாப்டர்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்திய ரஷ்ய ஹெலிகாப்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்.எம். நாத் கூறியதாவது:திட்டமிட்டபடி  அனைத்தும் நடந்தால், கர்நாடகாவில் துமகூருவில் தயாரிக்கப்படும் முதல், ‘காமோவ் 226டி’ ஹெலிகாப்டர் வரும் 2025ல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும்.

இந்த  கூட்டு முயற்சியின் கீழ் 200 ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட உள்ளன. அவற்றில் 60 ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படை,  ராணுவத்துக்கு வழங்கப்பட உள்ளன. இவற்றில் 72 சதவீதம் ரஷ்ய உதிரி பாகங்களும், 28 சதவீதம் மேற்கத்திய நாடுகளிடம் இருந்தும் வாங்கி பயன்படுத்தப்படும். பிறகு, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் 140 ஹெலிகாப்டர்களில், ரஷ்யாவின் 72 சதவீத உதிரி பாகங்களில் 70 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்களாக இருக்கும். ஒட்டு மொத்தமாக இந்த ஹெலிகாப்டரில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்களில் 40 சதவீதம் இந்திய  மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டதாக இருக்கும்.

இது குறித்த விரிவான திட்டங்கள்  அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறையில் கொள்முதல் பற்றிய  முக்கிய முடிவுகளை எடுக்கும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் ஒப்புதலைப்  பெற்றதும் இந்த ஹெலிகாப்டர்கள் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் தொடங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். ராணுவத்தில் தற்போது பயன்படுத்தப்படும் சீட்டாக், செடாக் ரக ஹெலிகாப்டர்கள் மிகவும் பழையதாகி விட்டன. இவற்றுக்கு மாற்றாகவே, இந்த காமோவ் ரக ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட உள்ளன.

Tags : India ,Kamov ,Russia ,Kamov Helicopters , India, Russia, Kamov helicopters
× RELATED விண்ணுக்கு சென்று பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி: இஸ்ரோ தகவல்