×

டெல்லியில் ஓய்ந்தது தேர்தல் பிரசாரம்: நாளை வாக்குப்பதிவு

புதுடெல்லி: டெல்லியில் அனல் பறந்த சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. நாளை வாக்குபதிவு நடக்க உள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்.8ம் தேதி தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. ஆளும் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியை பிடிக்கவும், இழந்த ஆட்சியை எப்படியாவது மீண்டும் பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் பாஜவும், காங்கிரசும் பம்பரமாக சுழன்று பிரசாரத்தில் ஈடுபட்டன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை 45 எம்.பி.க்கள், மத்திய அமைச்சர்களை பாஜ களம் இறக்கியது. அக்கட்சியின் தலைவர் அமித்ஷாவும் தெருத்தெருவாக சென்று பிரசாரம் மேற்கொண்டார். இதேபோல், பாஜ.வுக்கு ஆதரவாக பிரதமர் மோடியும், காங்கிரசுக்கு ஆதரவாக ராகுல் காந்தியும், பிரியங்காவும் தீவிர பிரசாரம் ேமற்கொண்டனர். இவர்களுக்கு சளைத்தவர் இல்லை என்பதுபோல் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவாலும் வாக்குகளை சேகரித்தார்.

பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வடகிழக்கு டெல்லியில் உள்ள சீலாம்பூரிலும், மேற்கு டெல்லியில் ஹரி நகர் மற்றும் மதிப்பூரிலும் சாலைவழி சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பத்பகர்கஞ்ச் தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தனது தொகுதிக்குள் நேற்று பாதயாத்திரையாக சென்று பிரசாரம் செய்தார். அமித்ஷாவின் கணிப்பு ‘45’: பாஜ தலைவர் அமித்ஷா நேற்று இறுதிகட்ட பிரசாரத்தில் கூறியதாவது: டெல்லியில் பாஜ.வுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். பிப்.11ல் தேர்தல் முடிவு வௌியாகும்போது பா.ஜ 45 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றார். இதேபோல் மக்களவை தேர்தலின்போது அவர், பாஜ 300 தொகுதியில் வெற்றி பெறும் என்றார்.

Tags : Election campaign ,Voting ,Delhi , Delhi, Election Campaign, Voting
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...