×

பொருளாதாரம் தொடர்ந்து மந்த நிலை கடன் வட்டியில் மாற்றம் இல்லை: நடப்பு நிதியாண்டு ஜிடிபி 5 சதவீதம்தான் ,.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை: குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி மாற்றம் செய்யவிலை. இது 5.15 சதவீதமாகவே நீடிக்கிறது.  ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை  நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் நடத்துகிறது. இதில் கடன் வட்டி விகிதம் நிர்ணயம் உட்பட முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன. நடப்பு நிதியாண்டுக்கான 6வது சீராய்வு கூட்டம், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் கடந்த 4ம் தேதி துவங்கியது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டது. குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்ய வேண்டாம் என, சீராய்வு குழுவில் உள்ள 6 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். எனவே, ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து ரெப்போ வட்டி 1.35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது 5.15 சதவீதமாக உள்ளது. இது கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத சரிவாகும்.

 சில்லறை விலை பண வீக்கம், கடந்த ஆண்டு அக்டோபரில் 4.6 சதவீதமாக இருந்தது. இது நவம்பரில் 5.5 சதவீதமாகவும், டிசம்பரில் 7.4 சதவீதமாகவும் அதிகரித்தது. இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவாகும். இதை கட்டுப்படுத்தும் நோக்கில் வட்டியை குறைக்கவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த கூட்டத்திலும் வட்டி குறைக்கப்படவில்லை. சில்லறை விலை பண  வீக்கம் நடப்பு நிதியாண்டின் ஜனவரி - மார்ச் காலாண்டில் 6.5 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காய்கறி, பருப்பு வகைகளின் பண வீக்கம் அதிகரிக்கலாம். பொருளாதாரம் தொடர்ந்து மந்த நிலையில் நீடிக்கிறது.  கடந்த டிசம்பரில் வெளியிட்ட நிதிக்கொள்கை அறிக்கையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இந்நிலையில், 2020-21 நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 சதவீதமாக இருக்கும்.

இதில், முதல் காலாண்டில் 5.5 முதல் 6 சதவீதமாகவும், 3ம் காலாண்டில் 6.2 சதவீதமாகவும் இருக்கும். நடப்பு நிதியாண்டில் ஜிடிபி ஏற்கெனவே கணித்தபடி 5 சதவீதமாகத்தான் இருக்கும். வீட்டுக்கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கான திருத்திய விதி முறைகள் வெளியிடப்படும். எம்சிஎல்ஆர் முறைக்கு மாற்றாக, ரெப்போ வட்டி, அரசு கடன் பத்திரங்கள் போன்ற வெளி கடன் விகிதங்களின்படி கடன் வட்டி நிர்ணயம் அறிமுகம் செய்யப்பட்டது. இதை பெரும்பாலான வங்கிகள் நடைமுறைப்படுத்த தொடங்கி விட்டன. இதுபோல், வரும் ஏப்ரல் 1 முதல் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் விகிதத்தை வங்கிகள் நிர்ணயிக்கும்.  ஜிஎஸ்டியில் பதிவு செய்யப்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் துறையினரின் கடன்களை மீறு சீரமைப்பு செய்வதற்கான அவகாசம் வரும் மார்ச் மாதம் வரை இருந்தது. இது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது. பொருளாதார மந்த நிலை காரணமாக, ஏற்றுமதி கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் சரிவை சந்தித்தது. இதே மாதங்களில் இறக்குமதியும் குறைந்தது.

  கடந்த 4ம் தேதிப்படி, அந்நிய செலாவணி கையிருப்பு 47,140 கோடி டாலராக உள்ளது. நிகர அந்நிய நேரடி முதலீடு நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரை 2,440 கோடி டாலராக உயர்ந்துள்ளது.  இது கடந்த ஆண்டு 2,120 கோடி டாலராக இருந்தது. மின்னணு பண பரிவர்த்தனைக்கான சுய கட்டுப்பாட்டு ஆணைய கட்டமைப்பு விதிகள் விரைவில் வெளியிடப்படும். அடுத்த நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் மார்ச் 31ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1ம் தேதி வரை நடைபெறும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் விரைவான காசோலை கிளியரிங் வசதி
காசோலைகளுக்கு தற்போது கணினி முறையில் விரைவாக அனுமதி வழங்கி, சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இருப்பினும், சில முக்கிய நகரங்களில் உள்ள பிரதான மையங்களில்தான் இந்த வசதி உள்ளது. இதை நாடு முழுவதும் விரிவு படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. வரும் செப்டம்பரில் இருந்து நாடு முழுவதும் விரைவான காசோலை கிளியரிங் வசதி அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நிதிப்பற்றாக்குறையை தீர்க்க கூடுதல் நோட்டு அச்சடிப்பா?
பொருளாதார மந்த நிலையால் ஏற்பட்ட நெருக்கடி ஒரு புறம் இருக்க, மத்திய அரசு கடுமையான நிதி பற்றாக்குறையால் தவித்து வருகிறது. தொடர்ந்து 3வது ஆண்டாக இதற்கான இலக்கை உயர்த்தியுள்ளது. மத்திய பட்ஜெட்டில் நடப்பு நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறை இலக்கு 3.3 சதவீதத்தில் இருந்து 3.8 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டுக்கும், கடந்த ஜூலை மதிப்பீட்டை விட 3 சதவீதத்தி–்ல் இருந்து 3.5 சதவீதமாக ஆக்கப்பட்டது. இந்நிலையில், நிதிப்பற்றாக்குறையை ஈடுசெய்ய கூடுதல் ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படுமா என்ற கேள்விக்கு விளக்கம் அளித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ், அப்படி ஒரு திட்டம் ரிசர்வ் வங்கியிடம் இல்லை என்றார்.

Tags : Economy, loan interest, current fiscal GDP, RBI
× RELATED நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூ.4..40 ஆக நிர்ணயம்