×

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி: பரோடாவை வீழ்த்தி தமிழகம் இன்னிங்ஸ் வெற்றி

வதோதரா: ரஞ்சி லீக் போட்டியில் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 57ரன் வித்தியாசத்தில்  பரோடா அணியை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது. நடப்பு ரஞ்சித்தொடரில்  எலைட் பிரிவில் உள்ள தமிழ்நாடு-பரோடா அணிகள் மோதிய லீக் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் செவ்வாய்கிழமை தொடங்கியது. பரோடா அணி   முதல் இன்னிங்சில்    51.4 ஓவரில் எல்லா விக்கெட்களையும் இழந்து 174ரன் எடுத்தது. தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் அபினவ் முகுந்தின் இரட்டை சதத்துடன்  108.4ஓவரில்  7 விக்கெட் இழப்புக்கு 490 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. அதனையடுத்து 316  ரன் பின்தங்கிய நிலையில் பரோடா அணி  2வது இன்னிங்சை தொடர்ந்தது. அந்த அணி 2வது நாளான நேற்று முன்தினம் ஆட்டநேர முடிவில்  6 ஓவருக்கு விக்கெட் இழப்பின்றி 10 ரன் எடுத்தது.

இந்நிலையில்  10 விக்கெட்கள் கைவசம் இருக்க, 306 ரன் பின்தங்கிய நிலையில் பரோடா அணி 3வது நாளான நேற்று 2வது இன்னிங்சை தொடர்ந்தது.  முதல் ஓவரின் 3வது பந்தில்  தொடக்க  ஆட்டக்காரர் அகமதுனூர் பதான் டக் அவுட்டானார். பொறுமையாக விளையாடிக் கொண்டிருந்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரர்  கேதர் தேவ்தர் 29, விஷ்ணு சோலங்கி 17, தீபக் ஹூடா 4,  யூசப் பதான் 1, ஸ்வப்னில் சிங் 0, வீராஜ்  போஸ்லே 6, அனுரீத் சிங் 13ரன் என தமிழக வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால் அணியின் கேப்டன் குருணால் பாண்டியா, அதித் ஷெத் ஜோடி அடித்து ஆட ஸ்கோர் உயர்ந்தது.  அவர்களும் ஆட்டமிழக்க  பரோடா அணி  63.3 ஓவரில் எல்லா விக்கெட்களையும் இழந்து 259ரன் எடுத்தது.

அதனால் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 57 ரன் வித்தியாசத்தில் தொடரின் 2வது வெற்றியை பதிவு செய்தது. குருணால் பாண்டியா 74(95பந்து, 10பவுண்டரி, 2சிக்சர்), 2வது இன்னிங்சிலும் அரை சதமடித்த அதித் ஷெத் 70ரன்(74பந்து, 7 பவுண்டரி, 3சிக்சர்) எடுத்தனர். தமிழ்நாடு அணியின்  கே.விக்னேஷ் 5 விக்கெட்களை அள்ள,  எம்.முகமது, ஆர்.சாய்கிஷோர் ஆகியோர் தலா 2,  பாபா அபரஜித் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். போட்டியின் ஆட்ட நாயகனாக அபினவ் முகுந்து தேர்வு செய்யப்பட்டார்.
இன்னும் ஒரு நாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில்  தமிழ்நாடு இந்த அபார வெற்றியின் மூலம் முழுவதுமாக 7 புள்ளிகளை பெற்று அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கிறது.

Tags : cricket match ,Baroda ,Ranji Trophy ,innings ,Tamil Nadu , Ranji Cup cricket match, Baroda, Tamil Nadu innings
× RELATED சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி...