×

போராட்டத்தை தூண்டிவிடுகிறார்கள் என்ற பேச்சு: ரஜினிக்கு மதகுருமார்கள் கடும் கண்டனம்

சென்னை: நடிகர் ரஜினிக்கு முஸ்லிம் மதகுருமார்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை பொது செயலாளர் அன்வர் பாதுஷா உலவி வெளியிட்ட அறிக்கை: மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள சிஏஏ சட்டம், என்ஆர்சி, என்பிஆர். தொடர்பாக நடிகர் ரஜினிகாந்தின் கருத்து அதிருப்தியளிக்கிறது. ஒரு தரப்பு கருத்துக்களை மட்டுமே ரஜினி பிரதிபலித்துள்ளார். பெருபான்மை மக்களின் கருத்துக்களில் உள்ள நியாயத்தை அவர் புரிந்து கொள்ளவில்லை.  பாஜக அரசின் சட்டங்களையும், உள்நோக்கத்தையும் சரியாக புரிந்து கொண்டதன் விளைவாகவே ஒன்று திரண்டு கடந்த 50 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். மேலும் இந்தியாவின் 15 மாநிலங்களின் முதல்வர்கள் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தூண்டிவிடப்படுகிறார்கள், பீதியை கிளப்புகிறார்கள் என்பது போன்ற வார்த்தைகள் ஒரு பெரும் மக்கள் இயக்கத்தை கொச்சைப்படுத்துவதாகும்.

முஸ்லிம் மதகுருமார்கள் இந்தியாவில் சுதந்திர போராட்டத்திற்கு முதல் களப்பலியானவர்கள் என்கிற வரலாற்றை ரஜினிகாந்த்துக்கு நினைவூட்டுகிறோம். அதே பொறுப்புணர்வோடு தான் தற்போது முஸ்லிம் மதகுருமார்கள். ஜனநாயக சக்திகளுடன் இணைந்து பாஜக அரசிற்கு எதிராக போராடி வருகிறார்கள். இப்போராட்டக்காரர்களின் கருத்துக்களை அவர் கேட்க வேண்டும். ஜனநாயக ரீதியாக போராடுகிற மக்களை ரஜினிகாந்த் தொடர்ந்து அவமதித்து வருகிறார் என்ற பழியில் இருந்து அவர் விடுபட வேண்டும். அவரை சந்தித்து விளக்கமளிக்க தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை: மாணவர்களை அரசியல்வாதிகள் தவறாக வழிநடத்துவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது. நடிகர் ரஜினிகாந்தின் பிதற்றல், அவரது இந்த பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்வதோடு, ரஜினியின் இந்த கருத்தை திரும்ப பெறாவிட்டால் அவரது விட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தமிழ்நாடு முஸ்லிம் லீக் திட்டமிட்டுள்ளது.

Tags : protest ,Priests ,Rajini Talk ,Rajini , Struggle, Rajini, clergy
× RELATED உஜ்ஜயினி மஹாகாலேஷ்வர் கோயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 14 பேர் காயம்!