×

சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீடுகளில் அதிரடி சோதனை 77 கோடி ரூபாய் சிக்கியது

* 300 கோடிக்கு வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு
* நடிகர் விஜய்யிடம் 30 மணி நேரம் விசாரணை

சென்னை: போலி கணக்கு மூலம் வருமானத்தை குறைத்து வரி ஏய்ப்பு செய்ததாக நடிகர் விஜய்யிடம் 2வது நாளாக நேற்றும் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் அதிமுக பிரமுகரும், சினிமா பைனான்சியருமான அன்புச்செழியன் வீடுகளில் உள்ள ரகசிய அறைகளில் இருந்து சாக்கு மூட்டையில்  இருந்த ரூ.77 கோடி ரொக்கப் பணம் மற்றும் ரூ.300 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  ஏ.ஜி.எஸ். சினிமா தயாரிப்பு குழுமம் உட்பட 38 இடங்களில் 2வது நாள் நடந்த சோதனையில் பினாமிகள் பெயரில் வாங்கப்பட்ட பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நடிகர் விஜய் சமீபத்தில் பிகில் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படம் வெற்றி பெற்று இந்திய அளவில் வசூல் வேட்டையில் முதல் 10 இடங்களை பிடித்தது. இதை சினிமா தயாரிப்பாளர் அகோரத்தின் மகள் அர்ச்சனா கல்பாத்தியும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், ஏஜிஎஸ் நிறுவனம் வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்த கணக்கில் நடிகர் விஜய்க்கு கொடுத்த ஊதியம் குறித்து கணக்கு காட்டப்பட்டுள்ளது. அந்த கணக்கும் நடிகர் விஜய் வருமான வரித்துறையிடம் கொடுத்த கணக்கும் முரண்பாடாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் ேநற்று முன்தினம் அதிரடியாக நடிகர் விஜய்க்கு சொந்தமான பனையூர், சாலிகிராமத்தில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை நடந்த நேரத்தில், நடிகர் விஜய், ‘‘மாஸ்டர்’’ என்ற படத்திற்காக நெய்வேலியில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார். இதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் நெய்வேலியில் அவரை சந்தித்து, விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து. பனையூரில் உள்ள அறையில் சோதனை நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர். அப்போது தன்னுடைய காரில் வருவதாக விஜய் தெரிவித்தார். ஆனால் அதை ஏற்காத வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களுடைய யுனோவா காரில் அழைத்துக் கொண்டு மாலை 4 மணிக்கு சென்னை புறப்பட்டனர். வழக்கமாக ஒரு நடிகர் ஷூட்டிங்கில் இருக்கும்போது, இப்படி விடாப்பிடியாக அழைத்து வருவதில்லை. விஜய்யை அதிகாரிகள் அழைத்துச் சென்றதால், படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் இரவு 9 மணிக்கு கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள வீட்டுக்கு அதிகாரிகள் அழைத்து வந்தனர். விஜய்யின் தனி அறையில் அவர் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டது. அதோடு அவரிடம் விடிய விடிய இரண்டாவது நாளாக  கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் குறித்து 15 அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை நேற்றுடன் 30 மணி நேரத்தை தாண்டி நள்ளிரவு வரை நீடித்தது. அப்போது, நடிகர் விஜய்யிடம் 2019-20ம் ஆண்டுக்கான வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்த ஆவணங்கள் மற்றும் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து நேரடியாக விசாரணை நடத்தினர்.இந்த விசாரணை இடையே நடிகர் விஜய்யின் ஆடிட்டரையும் வருமான வரித்துறை அதிகாரிகள் பனையூரில் உள்ள வீட்டிற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். மேலும், விஜய்யிடம் ஏ.ஜி.எஸ் திரைப்படம் நிறுவனம் சார்பில் ‘பிகில்’ படத்திற்கு எவ்வளவு ஊதியம் வழங்கப்பட்டது. வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்த ஆண்டு கணக்கில் ‘பிகில்’ படத்திற்கு வழங்கப்பட்ட ஊதியத்திற்கும் தாக்கல் செய்த ஆண்டு கணக்கில் கூறிய ஊதியமும் முரண்பாடாக இருப்பது ஆகியவை குறித்தும், கடந்த ஓராண்டில் வாங்கப்பட்ட அசையா சொத்துக்கள் மற்றும் அசையும் சொத்துக்கள் தொடர்பாகவும் கேள்விகள் கேட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு நடிகர் விஜய் அளித்த பதிலை வருமான வரித்துறையினர் பதிவு செய்தனர். அப்போது நடிகர் விஜய் மனைவி சங்கீதா பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்கள் குறித்து அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதற்கு சங்கீதா அளித்த பதிலையும் வருமான வரித்துறை அதிகாரிகள் பதிவு செய்தனர். பின்னர் விஜய் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் இரண்டு பைகளில் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த அதிரடி சோதனையால், நடிகர் விஜய் வீட்டின் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்துள்ளனர். இதனால் பனையூரில் உள்ள அவரது வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல், ஏ.ஜி.எஸ் குழுமத்திற்கு சொந்தமான அலுவலகங்கள், சென்னை தி.நகரில் உள்ள ஏ.ஜி.எஸ் குழுமத்தின் உரிமையாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் வீடு, அவரது சகோதரர்கள் வீடுகள், திருமலை பிள்ளை தெருவில் உள்ள ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் சென்னை வில்லிவாக்கம், நாவலூர், மதுரவாயல், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏ.ஜி.எஸ் திரையரங்குகளிலும் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி ரூபாய் ரொக்க பணம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டுக்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த ஆவணங்கள் குறித்தும், ‘பிகில்’ படத்தில் நடிகர் விஜய்க்கு கொடுத்த ஊதியம் குறித்தும் திரைப்படத்தின் மொத்த வருவாய் குறித்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஏஜிஎஸ் குழுமம் நிறுவனம் கல்பாத்தி எஸ்.அகோரத்திடன் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையும் நேற்று நள்ளிரவு வரை நீடித்தது.அதேநேரத்தில் மதுரை காமராஜர் சாலை, தெப்பக்குளம் கனி தெருவை சேர்ந்த அன்புச்செழியன்(45) வீடுகளிலும் சோதனை நடந்தது. அதிமுக பிரமுகரான இவர் திரைப்பட பைனான்சியர். சென்னை தி.நகர் ஜிஎன்செட்டி சாலையில் கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், பிகில் படத்துக்கு ஏஜிஎஸ் குழுமத்திற்கு 100 கோடிக்கு மேல் பணம் வட்டிக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. இவரது தாயார் வீடு மதுரை கீரைத்துறையில் உள்ளது.

மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள அன்புசெழியனின் திரைப்பட அலுவலகம், சென்னையில் உள்ள திரைப்படம் அலுவலகம், வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அதேபோல், அன்புசெழியன் நண்பர் சரவணன் வீட்டிலும், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் அன்புசெழியன் மதுரை வீட்டில் 17 கோடி பணமும், சென்னையில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் பிரத்யேகமாக கட்டப்பட்ட ரகசிய அறையில் இருந்து கட்டுக்கட்டாக சாக்கு மூட்டையில் இருந்த 60 கோடி ரொக்க பணம் என மொத்தம் 77 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணத்தை 10 பணம் எண்ணும் இயந்திரங்களை கொண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று மதியம் வரை எண்ணினர். பின்னர் மதுரை மற்றும் சென்னையில் கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத 77 கோடியை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அன்புசெழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து 300 கோடி வரிஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம்  3 வாகனங்களில் ஏற்றப்பட்டு வருமான வரித்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சினிமா தயாரிப்பாளரும் அதிமுக பிரமுகருமான அன்புச்செழியன் தான் ஏஜிஎஸ் குழுமத்திற்கு தொடர்ந்து பைனான்ஸ் செய்து வந்ததும் சோதனையில் தெரியவந்துள்ளது. அன்புச்செழியன் பினாமிகள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து இருப்பதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வருமான வரி சோதனை, இன்றும் நீடிக்கும் எனவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

நடிகர் விஜய்க்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்கள், சினிமா தயாரிப்பாளர் அன்புசெழியன் வீடு, அலுவலகம், ஏ.ஜி.எஸ் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் என சென்னை, மதுரை என தமிழகம் முழுவதும் 38 க்கும் மேற்பட்ட இடங்களில் இரண்டாவது நாளாக நடந்து வரும் அதிரடி சோதனையில் பினாமிகள் பெயரில் வாங்கப்பட்ட பல நூறு கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதவிர நடிகர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கி கணக்குகள், ஏஜிஎஸ் குழுமத்தின் வங்கி கணக்குகள், பைனான்சியர் அன்புசெழியன் வங்கி கணக்குகள் குறித்து நேரடியாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சோதனை முடிவில் தான் மத்திய அரசுக்கு எவ்வளவு கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து முழு தகவல் வெளியாகும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய் மற்றும் சினிமா தயாரிப்பாளர் அன்புசெழியன், பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமாக ஏ.ஜி.எஸ் குழுமத்தில் வருமான வரித்துறை ஒரே நேரத்தில் இரண்டாவது நாளாக அதிரடி சோதனை நடத்தி வரும் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : houses ,Anubasheliyan , Action checks , cinema financier, Anubasheliyan's houses
× RELATED மேட்டுப்பாளையம் அருகே காரமடை திருமா...