×

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு நிறைவு மண்டலாபிஷேகம் தொடங்கியது

தஞ்சை: தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா நேற்றுமுன்தினம் முடிந்ததையடுத்து மண்டலாபிஷேகம் விழா நேற்று தொடங்கியது.
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா நேற்றுமுன்தினம் கோலாகலமாக நடந்து முடிந்தது. குடமுழுக்கை தொடர்ந்து மகா அபிஷேகம் நடந்தது. இரவில் வீதியுலா சென்ற சுவாமிகள் கோயிலை அடைந்ததும் நள்ளிரவு 12.30 மணிக்கு நடை சாத்தப்பட்டது. அப்போது பக்தர்கள் வெளியே அனுப்பப்பட்டனர். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு வழக்கம்போல் கோயில் நடை திறக்கப்பட்டது. அப்போது, பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். இதன்பின்,  மண்டலாபிஷேகம் தொடங்கியது. மூலவர் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் எண்ணெய், பால் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து 48 நாள் இந்த அபிஷேகங்கள் நடைபெறும். இதற்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உபயதாரர்கள் மண்டலாபிஷேகங்களை நடத்துகிறார்கள்.

பிரதோஷத்தையொட்டி நேற்று மாலை நந்தியம்பெருமானுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. குடமுழுக்கு விழாவுக்காக கோயிலில் பாலாலயம் செய்யப்பட்ட தினத்தில் இருந்து இதுவரை பிரதோஷ விழா நடத்தப்படவில்லை. எனவே பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். குடமுழுக்கு விழாவையொட்டி பெரிய கோயிலுக்கு எதிரே உள்ள சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. நேற்று அதிகாலை முதல் அந்த சாலையில் டூவீலர், கார்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதுபோல பஸ் போக்குவரத்தும் வழக்கம்போல இருந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் குடமுழுக்கு விழாவில் பங்கேற்றபோதும் எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை, வழக்கமாக குடமுழுக்கு விழாக்களில் நடைபெறும் நகைபறிப்பு சம்பவங்கள் கூட நடைபெறவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

ஹெலிகேம் பறந்ததால் பரபரப்பு

பெரிய கோயிலில் நேற்றுமுன்தினம் இரவு கூட்டம் அதிக அளவில் இருந்தது. அப்போது கோயிலில் ஒரு ஹெலிகேம் வட்டமடித்து படம் பிடித்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தொல்லியல் துறை அதிகாரிகள் வந்து விசாரித்தனர். அங்கு ஒரு வாலிபர் ஹேலிகேமை இயக்கி கொண்டிருந்தார். அவரை பிடித்து அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அவர் ஹெலிகேம் படம் பிடிக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்தார். ஆனாலும் தொல்லியல் துறையினர் தடைவிதித்து அவரை மேற்கு போலீசில் ஒப்படைத்தனர்.

Tags : Mandalapishekam ,completion ,temple shrine ,Thanjavur ,Mandalabhishekam ,Thanjavur Temple Kudumbulgam , Mandalabhishekam was completed , Thanjavur Temple Kudumbulgam
× RELATED பாலக்காட்டில் எம்பி தொகுதி நிதி ரூ.2.26...