×

ஏழுமலையான் கோயில் கோபுரம் மீது விதிமுறைகளை மீறி பறந்த விமானம்: பக்தர்கள் கடும் அதிர்ச்சி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் கோபுரம் மீது கடந்த 2 நாட்களாக விதிமுறைகளை மீறி விமானம் பறந்தது. இதனால் பக்தர்களிடையே கடும்  அதிர்ச்சி  ஏற்பட்டது. உலகபுகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இங்குள்ள  ஏழுமலையானுக்கு  நாள்தோறும் வைகானச ஆகம முறைப்படி பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த விதிகளின்படி கோயில் கோபுரம் உள்ள பகுதியில் விமானங்கள்  பறக்கக் கூடாது என  தேவஸ்தான அர்ச்சகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை தேவஸ்தானம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவித்துள்ளது.

இக்கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, ஏழுமலையான் கோயில் பகுதியில் விமானங்கள் பறப்பதற்கு அதிகாரப்பூர்வமாக தடை விதிக்காவிட்டாலும் விமானங்கள்   பறக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர்.   இக்கோயிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாலும் விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை இருந்து வருகிறது. இந்நிலையில்  மத்திய அரசின் நேஷனல் சர்வே ஆப் இந்தியா 5 ஆண்டுக்கு ஒருமுறை எடுக்கக்கூடிய நிலப்பரப்பின் சர்வே பணிக்காக ஏழுமலையான் கோயில்  மீது கடந்த 2  நாட்களாக விமானம் தொடர்ந்து பறந்து வருகிறது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள்,  சென்னை ஏர் டிராபிக் கன்ட்ரோலருக்கு புகார் அளித்தனர். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல்  இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள்  உறுதி அளித்துள்ளனர்.  இந்நிலையில் பாஜ மாநில செயலாளர் பானுபிரகாஷ் நிருபர்களிடம் கூறும்போது,  ‘‘விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என உள்துறை  அமைச்சகத்திற்கு ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் நேற்று விமானங்கள்  பறந்துள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சருக்கு பேசி உள்ளேன்.  மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி  அளித்தார்’’ என்றார்.

Tags : Pilgrims ,temple tower ,Ezumalayan , Pilgrims' pilgrims flock to Ezumalayan temple tower
× RELATED சென்னையிலிருந்து தனி விமானம் மூலம்...