×

ஆமைவேகத்தில் மணியன்குழி - மணலோடை சாலை 2 வாரமாக போக்குவரத்து நிறுத்தம்...பொதுமக்கள் கடும் அவதி

குலசேகரம்: மலைபகுதியை சேர்ந்த மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையாக மணியன்குழி - மணலோடை சாலை உள்ளது. பல ஆண்டாக  மிக மோசமான நிலையில்  காணப்பட்டது. அரசு ரப்பர் கழகத்துக்கு சொந்தமான முதிர் ரப்பர் மரங்கள் வெட்டப்பட்டு இந்த சாலை வழியாக லாரிகளில் நீண்ட நாளாக கொண்டு செல்லப்பட்டு  வந்தது. இதனால் சாலை அடையாளம் தெரியாத அளவுக்கு பழுதாகி போனது.இதை காரணம் காட்டி மணலோடை, புறாவிளை ஆகிய பகுதிக்கு செல்லும் அரசு பஸ்கள் அடிக்கடி நிறுத்தப்படுவதும், பொது மக்களின் போராட்டத்துக்கு பிறகு  மீண்டும்  இயக்கப்படுவதும் வாடிக்கையாகி போனது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு கடந்த 2018 இறுதியில் இந்த சாலையில் 2.200 கிமீ தூரத்தை  சீரமைக்க  பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையால் ரூ. 64.81 லட்சம் ஒதுக்கப்பட்டது.

இதில் 1.855 கிமீ தூரம் தார் சாலையாகவும், 0.315 கிமீ தூரம் சிமென்ட் தளமாகவும் அமைக்க திட்டமிடப்பட்டு  கடந்த பிப்ரவரி 14 ல் பணி துவங்கப்பட்டது.  இதற்காக சாலை முழுவதும் பொக்லைன் எந்திரத்தால் தோண்டப்பட்டு பின்னர் கிடப்பில் போடப்பட்டது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பல மாத  இழுபறிக்கு பிறகு சாலையில் பெரிய ஜல்லிகளை பரப்பி விட்டு அதன் மண் போடாமல்  போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் குறுக்கே மண்ணை குவித்து  விட்டு கண்டு கொள்ளாமல் சென்றனர்.
 மனோதங்கராஜ் எம்எல்ஏ போராட்டம் அறிவித்ததையடுத்து மண்ணை ஜல்லிகளின்மேல் பரப்பி சரி செய்தனர். அதன் பிறகு இதுவரை  தார் போடாமல் கிடப்பில்  போட்டுள்ளனர்.

 ஒப்பந்த படி இந்த பணிகளை கடந்த ஆண்டு நவம்பர் 13 தேதியுடன் நிறைவு செய்துவிட்டு நவம்பர் 14 தேதி முதல் முதல் 2024 நவம்பர் 14 வரை  5 ஆண்டுகளுக்கு ரூ.7.92 லட்சம் செலவில் தேவையான இடங்களில் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும்.  ஆனால் பணி நிறைவடையும் காலம் முடிவடைந்து  3 மாதங்களுக்கு பிறகு சிமென்ட் தளம் அமைக்க வேண்டிய இடங்களில் தரமற்ற முறையில் சிமென்ட் தளம் அமைத்துள்ளனர். இதனால் கடந்த 2 வாரமாக  போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தரமற்ற முறையில் பணி நடந்துள்ளதால் எத்தனை நாளுக்கு இது தாக்குபிடிக்கும் என்று தெரியவில்லை.  இங்கு போடப்பட்டுள்ள சிமெண்ட் கலவையின் தரத்தை  மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்யவேண்டும். இனிமேல் நடக்க வேண்டிய தார் சாலை பணியையும் தகுந்த முறையில் கண்காணிக்க வேண்டும். குறிப்பிட்ட  காலகெடுவுக்குள் பணியை முடிக்காத ஒப்பந்தகாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி முழுமையான பிறகே பராமரிப்பு காலத்தை கணக்கிடவேண்டும்  என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலெக்டர் ஆபீசில் போராட்டம்

இதுகுறித்து மனோதங்கராஜ் எம்எல்ஏ கூறியது: தமிழகத்தில் எந்த பணியாக இருந்தாலும் கமிஷன் இல்லாமல் நடப்பது இல்லை. கீழ்மட்டம் முதல் மேல் மட்டம்  வரை கமிசன் பாய்கிறது. வளர்ச்சி பணிகள் திட்டமிடும்போது டெண்டருக்கு முன்னரே 15 சதவிகிதம் கமிசன் வசூலிக்கப்படுகிறது. மணியங்குழி - மணலோடை  சாலை முக்கியமான மலைகிராம சாலை. இந்த சாலைக்காக ஒவ்வொரு முறையும் போராட வேண்யது உள்ளது. வேகமாக பணியை முடித்து போக்குவரத்துக்கு  வழி செய்யாவிட்டால் மக்கள் குறைதீர்க்கும் நாளில் மக்களோடு சேர்ந்து கலெக்டர் ஆபிசில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றார்.



Tags : Maniyankuli - Manalode Road ,Traffic Stop ,Tortoise Road ,road , Maniyankuli - Manelodai road for two weeks
× RELATED திருப்பதி மலைப்பாதை போக்குவரத்து நிறுத்தம்