×

கடையம் பகுதிகளில் ஆட்டோவில் கொண்டு சென்று சத்துணவு முட்டை கூவி கூவி விற்பனை: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

கடையம்: கடையம் பகுதிகளில் அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய சத்துணவு முட்டைகள் பொது இடங்களில் ஆட்டோவில் வைத்து கூவி கூவி விற்றது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடையம் வட்டார பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் படிக்கும்  குழந்தைகளுக்கு மதிய உணவுடன் சேர்த்து முட்டை ஒன்று வழங்கப்படுகிறது. இந்த முட்டைகளில் அரசின் சீல் வைக்கப்பட்டிருக்கும். சீல் வைக்கப்பட்ட  முட்டைகள் மாணவர்கள் மற்றும் குழந்தைகளின் சத்துக்காக வழங்கபடுகிறது. இதனை விற்பது சட்டப்படி குற்றமாகும் என்பது அனைவரும் அறிந்தது.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் கடையம் அருகே மாதாபுரம், ஆசிர்வாதபுரம், மேட்டூர் பகுதிகளில் சத்துணவு மற்றும் அங்கன்வாடிகளுக்கு வழங்கப்படும் முட்டை ஆட்டோவில் வைத்து தெரு தெருவாக விற்கப்படுகிறது. சீல் வைக்கப்பட்ட இந்த முட்டைகள் 30 எண்ணம் ரூ.100க்கு விற்கப்படுகிறது. சத்துணவுக்கு வழங்கப்படும் சீல்
வைத்த முட்டைகள் கூவி கூவி விற்பனை செய்யப்படுவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்துணவுக்கு வழங்கப்பட்ட முட்டைகள்
எவ்வாறு விற்பனைக்காக வெளியே கொண்டு வரப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனால் மாணவ-மாணவிகளுக்கு முட்டை வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டு வருகிறது. அரசின் இந்த முட்டைகள் வெளியில் விற்கபடுவதால் மாணவர்களுக்கு  முறையாக முட்டை வழங்கவில்லை என்பது நிரூபணமாகி உள்ளது. ஏற்கனவே நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த டிச.23ம் தேதி பள்ளி வேலை நாளன்று முட்டை வழங்கவில்லை என குற்றசாட்டு எழுந்தது  குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கபடும் சத்துணவு திட்டத்தில் ஊழல் நடைபெற்று வருகிறது என சமூகஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து ஆய்வு செய்து மாணவர்களுக்கு முறையாக சத்துணவு முட்டை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என  பொதுமக்கள் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Auto Area ,Will District Administration ,district administration ,stall areas , Auto-transporting stall eggs in stall areas: Will the district administration take action?
× RELATED குமரி கடலில் குளிக்க 4-வது நாளாக தடை நீடிப்பு..!!