புளியங்குடியில் பரபரப்பு ஒற்றை ஆண் யானை ஆக்ரோஷம் மயிரிழையில் உயிர் தப்பிய தம்பதி

புளியங்குடி: புளியங்குடி வனப்பகுதியில் இன்று காலை ஒற்றை ஆண் யானை, மொபட்டில் தோட்டத்திற்கு சென்ற தம்பதியை தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தம்பதி இருவரும் மயிரிழையில் உயிர் தப்பினர். இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் புளியங்குடி வனச்சரகம் சோமரந்தான் பீட் பகுதியில் புளியங்குடி மற்றும் சுற்று வட்டார பகுதி விவசாயிகளுக்கு சொந்தமான எலுமிச்சை தோட்டங்கள் உள்ளன. இந்நிலையில்  புளியங்குடி ஆர்எஸ்கே பாண்டியன் தெருவை சேர்ந்த குருசாமி(70), அவரது மனைவி சுப்புலட்சுமி(60) ஆகியோர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் புளியங்குடி மனக்கடையார் கோவில் அருகேயுள்ள தங்களது எலுமிச்சை தோட்டத்திற்கு சென்றனர்.

 பிஸ்கட் காதர் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அருகே சென்றபோது ஒற்றை ஆண் யானை, தம்பதி சென்ற மொபட்டை பின்தொடர்ந்து விரட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதி இருவரும், மொபட்டை அங்கேயே போட்டுவிட்டு அருகில் உள்ள புதரில் சென்று பதுங்கி கொண்டனர். ஆக்ரோஷமாக காணப்பட்ட அந்த யானை, தம்பதியின் மொபட்டை தாக்கி சேதப்படுத்தியது.அந்த பகுதி வழியாக தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள், யானையின் அட்டகாசத்தை கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். தொடர்ந்து அவர்கள் தாங்கள் வந்த வாகனத்தின் ஒலியை தொடர்ந்து எழுப்பி யானையை அங்கிருந்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் யானை, அந்த இடத்தின் அருகில் உள்ள மற்றொரு தோட்டத்திற்கு சென்றது. இதனால் விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

 இதைத்தொடர்ந்து தோட்டத்தில் பதுங்கி உயிர்தப்பிய தம்பதி அங்கிருந்து வெளியில் வந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் இன்று காலை வழக்கம்போல் எலுமிச்சை தோட்டத்திற்கு வந்தோம். ஒற்றை யானை பின்தொடர்ந்து வந்ததால் அச்சத்துடன் மொபட்டை போட்டுவிட்டு அருகில் உள்ள மறைவிடத்தில் பதுங்கி உயிர் தப்பினோம்.  இறைவன் அருளால் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தோம் என்று அச்சத்துடன்  தெரிவித்தனர். யானை நடமாட்டம் குறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புளியங்குடி வன அலுவலர் ஸ்டாலின் உத்தரவுப்படி வன அலுவலர் அசோக் மற்றும் குழுவினர் சம்பவ பகுதிக்கு சென்றனர்.

 நெல்லையில் இருந்து வரவழைக்கப்பட்ட நவீன வாகனம் மூலம் யானையை அங்கிருந்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வனத்துறை அலுவலர் அசோக் கூறுகையில், ``ஜனவரி, பிப்ரவரி காலங்களில் யானை நடமாட்டம் வழக்கமாக காணப்படும். தற்போது மலைப்பகுதியில் இருந்து ஊருக்குள்ள வந்துள்ள ஒற்றை யானையை நவீன வாகனம் மூலம் விரட்டும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இன்று இரவுக்குள் யானையை காட்டுப்பகுதிக்குள் விரட்டி விடுவோம். பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்’’ என்றார்.

Related Stories:

>