×

சிவகாசியில் சிறுவர் பூங்காவை மறித்து மணல் குவிப்பு

சிவகாசி: சிவகாசியில் சிறுவர் பூங்காவை மறித்து மணலை குவித்து வருவதால், பூங்காவுக்குள் சிறுவர்கள் சென்று வருவதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. சிவகாசியில் நகராட்சி அலுவலகத்திற்கு 50 ஆண்டுகளுக்கு முன், நகரில் உள்ள காமராஜர் சிலை அருகே, 6 ஆயிரம் சதுர அடி பரப்பில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தில் நகராட்சி கூட்ட மன்ற அரங்கம், ஆணையாளர் அலுவலகம், பொறியாளர் அலுவலகம், நிர்வாக அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இதனிடையே, நகராட்சி அலுவலகம் நகரின் மையப்பகுதியில் இருப்பதால், போக்குவரத்து நெரிசல் மற்றும்  இட நெருக்கடி எற்படுவதாக கூறி, புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, நகரில் உள்ள 1வது வார்டு ரத்தினம் நகர் சிறுவர் பூங்கா அருகில், நகராட்சி புதிய அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நகராட்சி அலுவலக பணிக்காக தோண்டப்பட்ட மணல் குவியலை, சிறுவர் பூங்கா முன்பு  யாரும் செல்ல முடியாத அளவுக்கு, குவித்து வைத்துள்ளனர். இதனால், சிறுவர்கள் பூங்காவிற்குள் செல்ல சிரமப்படுகின்றனர். மேலும், ஒரு சில சிறுவர்கள் மணல் மீது ஏறி விளையாடி வருகின்றனர். மணல் குவியல் திடீரென சரிந்தால் சிறுவர்கள் மணலுக்குள் சிக்கும் ஆபத்து உள்ளது. மேலும், பூங்காவைச் சுற்றி, கட்டுமான வேஸ்ட் பொருட்கள், பழைய குப்பை வண்டிகளை நிறுத்தி வைத்துள்ளனர். பூங்காவின் முன்புறம் மணல் குவியல் இருப்பதால், சிறுவர்கள் பின்புறம் உள்ள மாற்று வழி மூலம் பூங்காவுக்குள் செல்கின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகத்தினர் பூங்காவிற்குள் சிறுவர்கள் சென்று வரும் வகையில், மணலை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sivakasi Children's Park , Sivakasi, children's park, sand accumulation
× RELATED தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை