×

மழையால் நீர் பெருகி 24 ஆயிரம் அபூர்வ பறவைகள் முகாம் தென் மாவட்ட குளங்களில் வேட்டையாடப்படும் பறவைகள்: மது பிரியர்கள் ‘பார்’ ஆக மாறிய குளக்கரைகள்

நெல்லை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 3 நாள் கணக்கெடுப்பில் 24 ஆயிரம் பறவையினங்களில் குளங்களில் முகாமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவற்றை வேட்டையாடுவதும், மதுப்பிரியர்கள் குளக்கரைகளை பார்ஆக பயன்படுத்துவதும் பறவைகள் ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது. 10வது தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி கடந்த ஜனவரி மாதம் 3 நாட்கள் நடத்தப்பட்டன.
இந்த பணியில் மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சார் இயற்கை வளகாப்பு மையம்,  ஜான்ஸ் கல்லூரி, முத்து நகர் இயற்கை கழகம் ஆகியவை இணைந்து  திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடத்தினர். இதில் சுமார் 100 தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.  6 குழுக்களாக பிரிந்து 51 பாசனக் குளங்களில் கணக்கெடுப்பு நடந்தது. இதில் 74 சிற்றினங்களைச் சார்ந்த சுமார் 24,411 பறவைகள் பதிவு செய்யப்பட்டது. அதிகமாக உண்ணிக் கொக்கு 3840, தகைவிலான் குருவி 2093, சில்லித் தாரா 2009, நீலச்சிறகு வாத்து 1752, உப்புக்கொத்தி 1368, நாமத்தலை வாத்து 1297 சிறிய
நீர்க்காகம் 1187 என்ற எண்ணிக்கையில் பதிவாகி உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கழுவூர், மானூர், மாறாந்தை மற்றும் நயினார் குளத்தில் பறவைகள் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து வருவதும் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டது. கழுவூர் குளத்தில் நூற்றுக் கணக்கான கூளக்கிடா, நத்தைக்குத்தி நாரை, கரண்டி வாயன் ஆகியவை இனப்பெருக்கம் செய்கின்றன. டவுன் நயினார் குளக்கரையில் உள்ள பாரம்பரிய மரங்களான மருதம், இலுப்பை மற்றும் பனை மரங்களில் சாம்பல் நாரை மற்றும் பாம்புத் தாரா ஆகிய பறவைகள் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து வருகின்றன. மானூர் மற்றும் மாறாந்தை குளங்களில் உள்ள உடக்கருவை மரங்களில் ெவள்ளை அரிவாள் மூக்கன், பாம்புத் தாரா, நீர்க்காகம் போன்ற பறவைகள் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து வருவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பறவைகள் இனப்பெருக்கம் செய்துவரும் இக்குளங்களை பாதுகாப்பதற்கு அரசு முன்வர வேண்டும். மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான குளங்கள் தூர்வார பட்டிருந்தாலும் குளங்களை சரியாக பராமாரிப்பதில்லை எனவும் பல குளங்களில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்தது,

காலி மதுபாட்டில்களுக்கு பஞ்சமில்லை, மதுப்பிரியர்களால் தூக்கி வீசப்பட்டுள்ள பிளாஸ்டிக் டம்ளர்கள், தண்ணீர் கவர்கள் ஏராளமாக உள்ளது எனவும்
ஆய்வாளர்கள் வருத்தத்துடன் ெதரிவிக்கின்றனர். குளக்கரைகளில் அமைந்துள்ள மரங்கள் மதுப்பிரியர்களின் திறந்தவெளி பாராக உள்ளது என்பது அதிர்ச்சியான செய்தி. ஒரு சில குளங்களில் பறவைகளை வேட்டையாடும் செயலும் நடைபெற்று வருகிறது. குளங்களின் வளம் பாதிக்காமல் இருப்பதற்கு இது போன்ற கேடு விளைவிக்கும் செயல்களை தடுத்து நிறுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதற்கட்டமாக பறவைகள் செழுமை மிக்க முக்கியமான குளங்களை தேர்ந்தெடுத்து அரசுத்துறைகள், பாசன விவசாய சங்கங்கள், தன்னார்வ குழுக்கள் மற்றும் நீரியல் மற்றும் பறவையியல் நிபுணரை உள்ளடக்கி பல்லுயிர் மேலாண்மை குழுக்கள் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு குளத்திற்கும் முறையான பராமரிப்பு மற்றும் மேலாண்மை திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

பறவை செழுமை மிக்க குளங்கள் ஒவ்வொன்றிற்கும் மக்கள் பல்லுயிர் பரவல் பதிவேடு உள்ளுர் மக்கள் ஒத்துழைப்போடு தயாரிக்கப்பட வேண்டும். குளங்களைச் சுற்றியுள்ள மக்களுக்கு நீர்நிலைகள் குறித்த முறையான விழிப்புணர்வை வழங்கி குளங்களையும் அதில் உள்ள பல்லுயிர்களையும் பாதுகாத்திட வழிவகுக்க வேண்டும் என மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள் சார் இயற்கை வளகாப்பு மையம அமைப்பாளர் மதிவாணன் தெரிவிக்கிறார்.

Tags : Breweries ,bar ,South District ,Southern District of Ponds: Water Brewers ,Thousand Rare Birding Camps , Rain, rare birds
× RELATED ‘அப் கி பார்…சாக்கோ பார்…’ இணையத்தில் தீயாய் பரவும் பாஜ கோஷம்